பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாய் மற்றும் சேயும் உயிரிழப்பு..!
ராணிப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைப் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண், குழந்தையும் உயிரிழந்த நிலையில் மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கூலித்தொழிலாளி கணேசன் என்பவரது மனைவி அர்ச்சனா தலைப் பிரசவத்திற்காக நேற்று இரவு ராணிப்பேட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் இல்லாததால் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
அதிகாலையில் குழந்தை இறந்தே பிறந்த நிலையில் தொடர்ந்து தாய் அர்ச்சனாவும் உயிரிழந்தார். உரிய சிகிச்சை அளிக்காததே உயிரிழப்புக்கு காரணம் எனக்கூறி உடல்களை ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் வாலாஜாபேட்டை வட்டாட்சியர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சடலங்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.






