மோடி மீண்டும் தமிழகம் வருகை! கூட்டணி கசமுசாவை சரிகட்ட திட்டம்.. தேமுதிக, பாமகவை இழுக்க வியூகம்..!
கடந்த வாரம் மோடி தமிழகத்திற்கு வந்தபோது திருச்சியில் சந்திக்காததால் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் கூட்டணி ஏற்பட்டுள்ள கசமுசாக்களை சரிகட்ட மீண்டும் மோடி தமிழகம் வருகிறார். இந்த பயணத்தின்போது தேமுதிக, பாமக கூட்டணி இறுதி செய்யப்படும் என்றும் தெரிகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 26 ஆம் தேதி தூத்துக்குடிக்கும், அடுத்த நாள் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்திற்கும் வந்திருந்தார். அப்போது ரூ. 450 கோடி ரூபாய் மதிப்பில் 17,340 சதுர மீட்டர் பரப்பளவில் தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை தொடங்கிவைத்தார். தேசிய நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், ரயில்வே மற்றும் மின்சாரத் துறை தொடர்பான திட்டங்கள் என ரூ. 4,900 கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களையும் அவர் அர்ப்பணித்தார்.
அடுத்த நாளில், அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில், ஆடி திருவாதிரை நாளில், மாமன்னர் ராஜேந்திர சோழனின் 1000-வது பிறந்தநாளைக் கொண்டாடும் முப்பெரும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
நரேந்திர மோடியின் தமிழக வருகையின்போது, திருச்சி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அரசியல் ஆலோசனைகள் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த மாதிரி சந்திப்புகள் எதுவும் நிகழாத நிலையில் ஏமாற்றத்துடன் எடப்பாடி பழனிசாமி திரும்பினார்.
தமிழகத்தில் கூட்டணி கட்சியின் தலைவராக உள்ள, ஒரு முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமிக்கென 5 நிமிடங்கள் கூட பாஜக தலைவரால் ஒதுக்க முடியாதா என்று, அதிமுகவில் உள்ள 2ஆம் கட்ட தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த நிலையில், கூட்டணி கசமுசாக்களை சரிகட்ட மீண்டும் மோடி தமிழகம் வருகிறார். இந்த பயணத்தின்போது தேமுதிக, பாமக கூட்டணி இறுதி செய்யப்படும் என்றும் தெரிகிறது. பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி தமிழகத்திற்கு மீண்டும் வருகை தரவுள்ளார்.
சிதம்பரம் மற்றும் திருவண்ணாமலை கோயிலுக்கு மோடி செலகிறார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்து நேரலையாக, மனதின் குரல் என்ற தனது வானொலி நிகழ்ச்சியில், நாட்டு மக்களிடம் உரையாற்ற மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருச்சியில் தேசிய ஜனநாயகக்கூட்டணி சார்பில் பிரசார கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரதமரின் இந்த வருகை, தமிழக அரசியல் வட்டாரங்களில் பல்வேறு ஊகங்களையும் எதிர்பார்ப்புகளையும் கிளப்பியுள்ளது. கடந்தமுறை திருச்சிக்கு வந்தபோது எடப்பாடி பழனிசாமியுடன் தனிப்பட்ட சந்திப்பைத் தவிர்த்து, ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்காதது என பல அதிருப்தி குரல்கள் உள்ள்னா. குறிப்பாக இபிஎஸை மோடி சந்திக்காதது அதிமுக தலைமை வட்டாரத்தில் ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த அதிருப்தியையும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிலவி வரும் சில “கசமுசாக்களையும்” சரிசெய்யும் நோக்கிலேயே பிரதமரின் இந்த இரண்டாவது வருகை அமையும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய கட்சிகளை இணைக்கும் திட்டங்கள் குறித்தும், மோடியின் ஆகஸ்ட் மாத பயணத்தின்போது இறுதி முடிவுகள் எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, வட தமிழகத்தில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு கொண்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் மறைந்த விஜயகாந்தின் தேமுதிக ஆகிய கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடையும் எனத் தெரிகிறது. இக்கட்சிகளை இணைப்பதன் மூலம், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தை அதிகரிக்க முடியும் என பாஜக தலைமை நம்புகிறது.
பாஜகவின் இந்த முயற்சி, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி தமிழகத்தில் ஒரு வலுவான கூட்டணியை அமைப்பதற்கான உத்தியின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. கூட்டணியை விரிவுபடுத்துவதுடன், உட்கட்சிப் பூசல்களைத் தணித்து, அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, தமிழக அரசியலில் பாஜகவின் செல்வாக்கை மேலும் நிலைநாட்ட பிரதமர் மோடியின் இந்த வருகை ஒரு திருப்புமுனையாக அமையலாம்.
மொத்தத்தில், ஆகஸ்ட் 26ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடியின் பயணம், தமிழக அரசியல் காட்சியில் பல மாற்றங்களுக்கு அடித்தளமிடும். கூட்டணியில் நிலவும் குழப்பங்களுக்கு முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





