மஹிவா மொய்த்ராவை பாஜக அரசு பதவி நீக்கம் : ஜனநாயக படுகொலை
மேற்கு வங்க மாநிலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் மகுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு எதிராக காட்டமான கேள்விகளை எழுப்பி சிம்ம சொப்பனமாக விளங்கி வந்தார்.
இதனிடையே அதானி குறித்து கேள்விகளை எழுப்ப தொழிலதிபர் ஹிரா நந்தானியிடம் பரிசுகள் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதுதொடர்பாக பாஜக அளித்த புகாரின் பேரில் நாடாளுமன்ற நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி அறிக்கை சமர்பித்தது.
அதன் அடிப்படையில் மகுவா மொய்த்ரா மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நேற்று நீக்கப்பட்டார். இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில், மகுவா மொய்த்ராவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து பாஜக அரசு பதவி நீக்கம் செய்திருப்பது அப்பட்டமான ஜனநாயக படுகொலையாகும் என்றும், அவர் கேள்விகளை எதிர்கொள்ள முடியாத மோடி அரசு, பழிவாங்கும் நோக்குடன் முறையற்ற வகையில் அவரை பதவி நீக்கம் செய்து இந்திய அரசியலமைப்பையும், மக்களாட்சி மாண்பையும் கேலி கூத்தாக்கியுள்ளது என்றும் குற்றம்சாட்டினார்.
தங்களது ஆட்சி அதிகாரத்திற்கு எதிராக யாரும் கேள்வி எழுப்பக்கூடாது என்ற பாஜகவின் இத்தகைய கொடும் மனப்பான்மை கோழைத்தனமானதாகும் என விமர்சித்துள்ள சீமான், மகுவா மொய்த்ரா எழுப்பிய ஏதாவது ஒரு கேள்விக்கு பிரதமர் மோடியிடமோ அல்லது அமித்ஷா உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்களிடமோ, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களிடமோ பதில் இருந்துள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.






