--- --:--:-- --

மகாராஷ்டிரா அரசியல் குழப்பம் முடிவுக்கு வருமா..? – உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு!!

t

மகாராஷ்டிராவில் பட்னாவிைஸை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததை எதிர்த்தும், நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்தக்கோரியும் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. இதனால் மகாராஷ்டிரா அரசியல் குழப்பம் முடிவுக்கு வருமா? என்பது இன்று தெரிய வரும்.

 

மகாராஷ்டிராவில், பாஜக – சிவசேனா இடையே ஏற்பட்ட உரசலால் புதிய அரசு அமைப்பதில் ஒரு மாதமாக குழப்பம் நீடித்து வந்தது. என் சி.பி. மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சியமைக்கும் முயற்சி கடந்த 22-ந் தேதி வெற்றி பெற்றது. ஆனால் அன்று ஒரே நாள் இரவில் நடந்த அதிரடி திருப்பத்தில் 23-ந் தேதி காலை பாஜகவின் பட்னாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

 

ஆட்சி அமைக்க போதிய பலம் இல்லாத நிலையில், அவசர அவசரமாக பட்னா விசை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததை எதிர்த்தும், உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக் கோரியும் சிவசேனா கூட்டணி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் கடந்த ஞாயிறன்றும், நேற்றும் காரசார விவாதங்கள் நடைபெற்ற நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் தங்கள் தரப்பில் 162 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக சிவசேனா கூட்டணி அழுத்தமாக கூறி வருகிறது. அதை நிரூபிக்க162 பேரையும் நேற்றிரவு தனியார் நட்சத்திர ஓட்டலில், செய்தியாளர்கள் முன்னிலையில் அணி வகுக்கச் செய்தனர். அத்துடன் 162 பேரும் சிவசேனா தலைமையில் ஆட்சியமைக்க ஆதரவு தருவதாக உறுதி மொழியும் ஏற்றது மகாராஷ்டிர அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.

 

இதனால், இன்றைய உச்ச நீதிமன்ற தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித் பவாரை நம்பி ஆட்சியமைத்த பாஜக தரப்புக்கு போதிய பலம் இல்லை என்பது வெட்ட வெளிச்கமாகியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் வழங்கப் போகும் தீர்ப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஓரிரு நாட்களில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிடும் பட்சத்தில், அதனை பட்னாவிஸ் எதிர்கொள்வாரா? அல்லது முன்னதாகவே பதவியை ராஜினாமா செய்வாரா? என்ற விவாதங்களும் எழுந்து மகாராஷ்டிரா விவகாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon