--- --:--:-- --

“ஓட்டெடுப்புக்கு தயார்!” பாஜக பிடியில் உள்ள காங்., எம்எல்ஏக்களை மீட்க நடவடிக்கை..! ம.பி. ஆளுநருக்கு முதல்வர் கமல்நாத் கோரிக்கை!!

15

மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் மெஜாரிட்டியை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என்றும், பாஜக தான் குதிரை பேரத்தில் ஈடுபட்டு காங்கிரஸ் எம்எல்ஏக்களை பெங்களூருவில் தங்கள் பிடியில் வைத்துள்ளது. அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ம.பி.ஆளுநரிடம் முதல்வர் கமல்நாத் நேரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

மத்தியப் பிரதேசத்தில், ஆளும் காங்கிரஸ் அரசுக்கு கடும் நெருக்கடி எழுந்துள்ளது. காங்கிரஸ் முக்கியத் தலைவராக திகழ்ந்த ஜோதிராதித்ய சிந்தியா திடீரென அதிருப்தியாளராக மாறினார். தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேருடன் மாயமான சிந்தியா, இப்போது பாஜகவில் இணைந்தும் விட்டார். தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், கமல்நாத் தலைமையிலான அரசும் கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

 

ராஜினாமா செய்த 22 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 19 பேர் பெங்களுருவில் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாஜகவின் பிடியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த எம்எல்ஏக்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை மாநில ஆளுநர் மற்றும் சபாநாயகருக்கு தபால் மூலம் அனுப்பியிருந்தனர். இதனால் ராஜினாமாவை ஏற்க மறுத்த அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் பிரஜாபதி, தன்முன், நாளைக்குள் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளார்.

 

கடந்த நான்கு நாட்களாக ம.பி.மாநில அரசியலில் பெரும் திருப்பங்கள் அரங்கேறிய நிலையில் மாநில ஆளுநர் லால்ஜி தாண்டன், ஹோலி விடுமுறையில் இருந்தார். நேற்றிரவு தான் தலைநகர் போபாலுக்கு திரும்பிய நிலையில், அடுத்த காட்சிகள் அரங்கேறத் தொடங்கியுள்ளன. இன்று காலை ஆளுநர் மாளிகை சென்ற முதல்வர் கமல்நாத், ஆளுநர் லால்ஜி தாண்டனை சந்தித்து கடிதம் ஒன்றைக் கொடுத்தார்.

 

அதில், ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது. ஜனநாயகத்துக்கு விரோதமாக, குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க முயல்கிறது.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேரையும், பாஜக தான் பெங்களூருவில் தங்க வைத்து பாதுகாத்து வருகிறது. அவர்களை சுதந்திரமாக நடமாட ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப்பேரவை கூட்டத் தொடர் 16-ந் தேதி தொடங்கும் நிலையில், ஆளுநர் உத்தரவிட்டால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி மெஜாரிட்டியை நிரூபிக்கவும் தயார் என கமல்நாத் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon