--- --:--:-- --

லட்டு சர்ச்சை… திருப்பதிக்கு சென்று விசாரணையைத் தொடங்கிய சிறப்புக் குழு!

2

திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தியது குறித்து விசாரிக்க ஆந்திர அரசு அமைத்த சிறப்புக் குழு திருப்பதி சென்று விசாரணையைத் தொடங்கியது.

 

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், திருப்பதி லட்டு தயாரிக்க வழங்கப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதற்கு திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்தார். தொடர்ந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்திலும் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் குண்டூர் சரக ஐ.ஜி. சர்வ ஷரஸ்தா திரிபாதி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இந்த விவகாரத்தில் ஐஜி தலைமையில் 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை ஆந்திர மாநில அரசு அமைத்தது.

 

குண்டூர் சரக காவல் துறை ஐஜி சர்வசிரேஷ்ட திரிபாதி தலைமையிலான இந்தக் குழுவில், விசாகப்பட்டினம் சரக டிஐஜி கோபிநாத், ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்வர்த்தன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

 

இந்த சிறப்புக் குழு இன்று திருப்பதி சென்று விசாரணையைத் தொடங்கியது. முன்னதாக, பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவை அந்தக் குழுவினர் சந்தித்துப் பேசினர்.

Right Menu Icon