சும்மா கிழி ! கிழிக்கப்படும் அனிருத் தர்பார் பாடல்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் பாடல் ஐயப்பசுவாமி பற்றிய பழைய பாடலை காப்பியடித்து உருவாக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சர்ச்சையில் உலாவரும் இசை மெட்டு குறித்து நெட்டிசன்கள் வறுத்தெடுக்க தொடங்கியுள்ளனர்.
ஏ .ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நயன்தாரா நடிக்கும் தர்பார் படத்தின் முதல் சிங்கிள் பாடலான சும்மா கிழி என தொடங்கும் பாடல் வெளியாகி ரஜினி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது. நான்தான்டா இனிமேலு வந்து நின்னால் தர்பாரு எனும் பாடல் வரிகள் அவரது அரசியல் பிரவேசத்தை குறிக்கும்படி அமைந்துள்ளன.
பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே யூடியூபில் பல லட்சக்கணக்கானோர் பார்வையிட்டு ரசித்திருக்கிறார். இந்த பாடலுக்கு இசை அமைத்திருக்கும் இசை அமைப்பாளர் அனிருத் பாடலுக்குரிய மெட்டை சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஆன்மீக பாடகர் ஸ்ரீ ஹரி பாடிய ஐயப்பன் பாடல் ஆன கட்டோடு கட்டுமுடி என்ற ஆல்பத்திலிருந்து அப்படியே காப்பி அடித்து உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
மற்றுமொரு தரப்பு இது 1990களில் தேவா இசையில் வெளியாகி ஹிட்டடித்த வைகாசி பொறந்தாச்சு படத்தில் இடம்பெற்ற தண்ணி குடம் எடுத்து என்ற பாடலின் மெட்டு என கிண்டல் செய்து வருகின்றனர். இந்த இரண்டு பாடல்களை கேட்டு பார்த்ததில் சுமார் கிழி பாடலில் அவற்றின் சாயல் உள்ளதையும் மறுப்பதற்கில்லை.
ஏற்கனவே கொலவெறி பாடல் தொடங்கி கோலமாவுகோகிலா பாடல் வரை காப்பியடித்த சர்ச்சையில் சிக்கியதால் சமூகவலைதளங்களில் அனிருத்தை நெட்டிசன்கள் தாறுமாறாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
வடிவேலு, செந்தில், கவுண்டமணி உள்ளிட்டோர் காமெடிகளை வைத்து உருவாக்கப்பட்டுள்ள அனிருத் ட்ரோல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பொதுவாக கோலிவுட்டில் கதை திருட்டு தான் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது ட்யூன் திரட்டும் நெட்டிசன்கள் விமர்சனத்திற்கு தப்பவில்லை.





