‘பாஜக’வும் வேணாம்… ‘காங்கிரசும்’ வேணாம்..!தேசிய கட்சிகளுக்கு ஒரே நாளில் “போகி” கொண்டாடிய திராவிட கட்சிகள்!!
தேசியக் கட்சிகளான காங்கிரசுடனும், பாஜகவுடனும் வலியப் போய் கூட்டு வைத்த திமுகவும், அதிமுகவும், இப்போது அந்த இரு கட்சிகளையும் இப்போது வேஸ்ட் என கருதி விட்டன போலும். இதனால் தமிழகமே போகியை கொண்டாடிய நேற்றைய தினத்தில் இந்த தேசிய கட்சிகள் இரண்டுக்கும் இரண்டு திராவிட கட்சிகளும் போகி கொண்டாடியதுதான் தமிழக அரசியலில் ஹாட் டாபிக்காகி விட்டது எனலாம்.
தமிழர்களின் திருநாளாம் தைத்திரு நாளை பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் கொண்டாடுவது வழக்கம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழிப்படி, தை முதல் நாளுக்கு சில தினங்களுக்கு முன்பே வீடு, வாசல்களை சுத்தம் செய்வது, வர்ணம் பூசி மாக்கோலம் போடுவது என சுறுசுறுப்பாகி விடுவர்.
இப்படி சுத்தம் செய்யும்போது வேண்டாத பொருட்களை எல்லாம் ஓரம் கட்டி, குப்பையில் தூக்கி வீசுவது அல்லது தீயிட்டு கொளுத்தி அப்புறப்படுத்துவதைக் கூட ஒரு பண்டிகை கொண்டாட்டமாகவே கடைப்பிடிப்பதும் தமிழர்களின் வழக்கம். அப்படித்தான் தைப் பொங்கலுக்கு முதல் நாளான நேற்று போகிப் பண்டிகை கொண்டாடி வேண்டாத, உதவாத பழைய பொருட்களை குப்பைத்தொட்டியில் தூக்கி எறிந்தும், தீயிட்டு கொளுத்தியும் மகிழ்ந்தனர்.

இந்த போகி நாளில், தமிழக அரசியல் களத்திலும் மகா திருப்பம் அரங்கேறியுள்ளது. நாட்டின் இரு பெரும் தேசியக் கட்சிகளான காங்கிரசையும், பாஜக வையும் இனி பிரயோஜனமில்லை என குப்பைத் தொட்டியில் கடாசியது போல திமுகவும், அதிமுகவும் சொல்லி வைத்தாற்போல் ஒரே நாளில் உதாசீனம் செய்துள்ளதுதான் இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ், பாஜக ஆகிய தேசிய கட்சிகளுடன் பல்லாண்டுகளாக மாறி மாறி கூட்டணி வைப்பதையே திமுகவும், அதிமுகவும் வழக்கமாக்கி வந்தன. தற்போதைய நிலவரப்படி அதிமுக கூட்டணியில் பாஜகவும், திமுக கூட்டணியில் காங்கிரசும் அங்கம் வகிக்கின்றன. சுதந்திரம் பெற்ற காலத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் மட்டுமே தமக்கு ஈடான எதிரியே இல்லாத பிரதான கட்சியாக திகழ்ந்தது.1957-ல் திமுக எப்போது தேர்தல் அரசியலுக்கு வந்ததோ அது முதல் காங்கிரசுக்கு இறங்குமுகமாகி விட்டது.
இதனால் 1967-ல் திமுகவிடம் ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ், மீண்டும் காமராஜர் ஆட்சி அமைப்போம் என அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் வெற்றுக் கோஷம் மட்டுமே போட முடிந்ததே தவிர, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை போல கட்சி தேய்ந்து விட்டது. இப்போது தலைவர்கள் மட்டுமே (அதுவும் பல கோஷ்டியாக) உள்ள நிலையில் தொண்டர்களே இல்லாத கட்சியாகிவிட்டது. 2 சதவீத வாக்கு வங்கி கூட இல்லாத காங்கிரஸ், தேர்தலின் போது மட்டும் 15%, 20% சதவீதம் என மேலிடம் மூலம் திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து கோஷ்டித் தலைவர்களுக்கு சீட்டுகளை பங்கு பிரித்து கொடுத்து விடுகிறது.

காங்கிரசுக்கு கூடுதல் சீட்டுகளை கொடுத்து, வெற்றி பெற வைக்கவும் நாம் தான் பாடுபட வேண்டியுள்ளது. அப்படியும் காங்கிரசுக்கு ஒதுக்கும் பெரும்பாலான இடங்களில் தோற்றும் விடுகிறது. இப்படித்தான் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகளில் ஒதுக்கியதாலேயே திமுக ஆட்சியமைக்கும் வாய்ப்பு கூட பறிபோனதாக திமுக நினைக்கிறது.
2016 சட்டப் பேரவை தேர்தலில் திமுகவிடம் மல்லுக்கட்டி 41 தொகுதிகளைப் பெற்றது காங்கிரஸ்.ஆனால் ஜெயித்தது வெறும் 8 இடங்களில் மட்டுமே. இதனை சதவீத கணக்குப்படி பார்த்தால் 20% கூட கிடையாது. அதிலும் தென் மாவட்டங்களில் தான் காங்கிரஸ் வெற்றி பெற்றது.வட மாவட்டங்கள், டெல்டா , கொங்கு மாவட்டங்களில் காங்கிரஸ் ஜுரோதான். அதே வேளையில் திமுக 173 தொகுதிகளில் போட்டியிட்டு 89 தொகுதிகளில் வெற்றி பெற்றது. வெற்றி சதவீத கணக்கு பார்த்தால் 50% ஐ தாண்டுகிறது. எனவே காங்கிரசுக்கு இன்னும் குறைத்து கொடுத்திருந்தால் ஆட்சியை பிடித்திருக்கலாம் என அப்போதே நினைத்தது திமுக.
பின்னர் கடந்த மக்களவைத் தேர்தலிலும் 9 தொகுதிகளை வீம்பு பிடித்து வாங்கியது காங்கிரஸ்.திமுகவும் மத்தியில் காங்கிரஸ் அரசு வரவேண்டும் என தாராளம் காட்டி கொடுத்தாலும், திமுக நின்ற இடங்களில் எல்லாம் ஜெயிக்க, காங்கிரஸ் தேனியை கோட்டை விட்டது. இதற்கு காரணம் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இவிகேஎஸ் இளங்கோவனுக்கு கோட்டா சிஸ்டத்தில் தேனியை ஒதுக்கியது தான்.
இப்போதும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதே கூத்து தான். காங்கிரசுக்கு சீட் ஒதுக்கினாலும் போட்டியிட ஆள் இல்லை. தப்பித்தவறி ஓரிரு கவுன்சிலர்கள் மட்டும் ஜெயித்துவிட்டு, மாவட்ட, ஒன்றிய தலைவர் பதவிகளை கேட்டு அடம் பிடிக்க, திமுகவோ கைவிரிக்க, ஆதங்கத்தில் கே.எஸ்.அழகிரி அறிக்கை விட, இதுதான் சாக்கு என, சோனியா கூட்டத்தை புறக்கணித்து திமுக போக்கு காட்ட கடைசியில் கூட்டணி டமால் ஆகும் நிலைக் கே வந்து விட்டது. கூட்டணி குறித்து போகி தினமான நேற்று திருவாய் மலர்ந்த திமுகவின் டி.ஆர்.பாலு வோ “காலம் தான் பதில் சொல்லும்” எனக் கூறி செக் வைத்து விட்டார்.

திமுக கூட்டணியில் காங்கிரசை கழட்டி விட திமுக இப்படி முடிவெடுக்க, அதிமுகவும் பாஜகவை கழட்டி விட்டுதற்கான அச்சாரத்தையும் நேற்றைய போகி தினத்தில் அப்பட்டமாக வெளிப்படுத்திவிட்டது எனலாம். காங்கிரஸ் தமிழகத்தில் தேய்ந்து விட்டது என்பதால் திமுக கழட்டி விடப் பார்க்கிறது. ஆனால் பாஜகவோ மத்தியில் பிரதமர் மோடியின் ஆட்சியை வைத்து தமிழகத்தில் தாமரையை மலரச் செய்தே தீருவது என கங்கணம் கட்டி கட்சியை வளர்க்க பல்வேறு யுக்திகளை கையாள்கிறது.
அதற்கு அதிமுகவை கைப்பாவையாக்கப் பார்க்கிறது. பெரிய அண்ணன் மனப்பான்மையில் அதிமுகவுக்கு பாஜக கொடுக்கும் நெருக்கடிகளை அக்கட்சித் தலைவர்கள் இப்போது ரசிக்கவில்லை போலும்.குட்டக்குட்ட குனிவது எவ்வளவு நாளைக்கு ?. பொறுத்தது போதும் பொங்சி எழுவோம், பாஜகவை கைகழுவுவோம் என்ற மனநிலைக்கு அதிமுக வந்து விட்டதாகவே தெரிகிறது.
இதனால் அதிமுக தற்பால் தக்க சமயம் பார்த்து காத்துக் கிடந்திருப்பார்கள் போலும். எஸ்.ஐ.வில்சன் பயங்கரவாத கும்பலால் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்தை காரணம் காட்டி, தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாகிவிட்டது என பாஜகவின் மூத்த தலைவரான முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது தான் தாமதம், அதிமுக தரப்பு இதுதான் சாக்கு என பொங்கி எழுந்து விட்டது.

அதிமுக மூத்த அமைச்சரான ஜெயக்குமார் நக்கலும் நையாண்டியுமாக பொன்.ராதாகிருஷ்ணனை ஏகத்துக்கும் விமர்சித்து, பதவி கிடைக்காத விரக்தியில் பேசுகிறார் எனக் கூறி பாஜகவையும் சீண்டி விட்டார். என்ன அமைச்சர் ஜெயக்குமார் இப்படி பேசியுள்ளாரே? என்று முதல்வர் எடப்பாடியிடம் கேட்க அவரும் ஜெயக்குமார் கூறியது தான் கட்சியின் கருத்து என ஒரே போடாக போட்டு அதிமுக தரப்பு, பாஜகவுக்கு போகி கொண்டாடி விட்டது என்றே கூறலாம்.
இப்படி, போகி நாளில் திமுகவும், அதிமுகவும் தேசியக் கட்சிகளுக்கு செக் வைத்து, கூட்டணியில் இருந்து கழட்டி விடவும் தயாராகி விட்டதால் தமிழக அரசியல் களம் மீண்டும் ஒரு பரபரப்புக்கு தயாராராகி விட்டது என்றே கூறலாம். இனி காங்கிரசும், பாஜகவும் யார் மீது குதிரை சவாரி செய்யப் போகின்றனவோ என்ற கேள்வி எழுந்தாலும், அடுத்து கட்சி ஆரம்பிக்கப் போகிறேன் என கூறி வரும் சூப்பர் ஸ்டாரை இரு கட்சிகளுமே குறிவைக்கலாம் எனவும் தெரிகிறது.





