இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து..இயக்குநர் ஷங்கரிடம் சரமாரி கேள்வி!
Shankar At The 2.0 Trailer Launch
இந்தியன் 2 படப்பிடிப்பின்போது கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக திரைப்பட இயக்குனர் சங்கரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். சென்னை வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இயக்குனர் ஷங்கர் விசாரணைக்கு ஆஜரானார். சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை துணை ஆணையர் நாகஜோதியின் கேள்விகளுக்கு அவர் பதில் தந்ததாக தெரிகிறது.
இந்தியன் 2 படப்பிடிப்பின்போது யார் யாரெல்லாம் இருந்தார்கள்? கிரேன் அறுந்து விழுந்தது எப்படி? கிரேன் எங்கிருந்து வரவழைக்கப்பட்டது? அதன் தாங்கும் திறன் குறித்து ஏற்கனவே படக்குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டதா? எவ்வளவு கிலோவை தூக்கும்பொழுது விபத்து நேர்ந்தது? யாருடைய அஜாக்கிரதையால் கிரேன் அறுந்து விழுந்தது? இதுபோன்ற பல்வேறு கேள்விகளை இயக்குனர் ஷங்கரிடம் முன் வைத்ததாக தெரிகிறது.
முன்னதாக காவல்துறை ஆணையர் விஸ்வநாதனை சந்தித்து சங்கர் விபத்து தொடர்பாக விளக்கம் தந்ததாகவும் கூறப்படுகிறது. சென்னை பூந்தமல்லியில் உள்ள நசரத்பேட்டை ஈவிபி பிலிம் சிட்டியில் இந்தியன் டூ படப்பிடிப்பு நடைபெற்றது.
கடந்த 19 ஆம் தேதி படப்பிடிப்பு முடிந்து நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் ஷங்கர் புறப்பட்ட சில நொடிகளிலேயே படப்பிடிப்பு தளத்தில் இருந்த கிரேன் அறுந்து விழுந்தது. இதில் உதவி இயக்குனர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரித்து வரும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கிரேன் ஆபரேட்டரை கைது செய்தனர்.
மேலும் 6 பேரிடம் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். தற்போது இயக்குனர் ஷங்கரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் நடிகர் கமல்ஹாசன் லைகா புரொடக்ஷன் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஆகியோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.






