--- --:--:-- --

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு..!

1

க்களவைத் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அனைத்துக் கட்சி எம்.பி.க்களை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என்று திமுக எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நாளை தொடங்கும் நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது.

 

மும்மொழிக்கொள்கை, நிதிப்பகிர்வு, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் மக்களவை தொகுதிகளை பாதுகாக்க நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவது என்று திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.

 

தொகுதி மறு சீரமைப்பினால் தொகுதிகளை இழக்கும் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மேற்குவங்கம், ஒடிசா உள்ளிட்ட 7 மாநிலங்களையும் ஒருங்கிணைத்து களம் காண்போம் என்பன உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டபடி அமைக்கப்படவுள்ள கூட்டு நடவடிக்கை குழுவுக்கு பிற மாநில கட்சிகளை நேரில் சென்று அழைக்க அமைச்சர்கள், எம்.பி.க்கள் கொண்ட குழு அமைப்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

 

அதன்படி, கேரளாவிற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆந்திராவிற்கு அமைச்சர் எ.வ.வேலு, மேற்குவங்கத்திற்கு திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி, ஒடிசாவிற்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோரை அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.தொடர்ந்து திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், தமிழ்நாடு அரசு நடத்திய அனைத்துக் கட்சி கூட்டம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்திருப்பதாகத் தெரிவித்தார்.

 

தொகுதி மறுவரையறை பிரச்னையில் நமக்கான உரிமையப் பெற இது ஒரு தொடக்கம்தான் என்றும் நம் கோரிக்கைகள் வெற்றியடையும் வரை இந்த போராட்டமும் தொடர வேண்டும் என்றும் முதலமைச்சர் பேசியதாகக் கூறப்படுகிறது.மேலும், தொகுதி மறுவரையறை என்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் பிரச்னை இல்லை என்பதால், தமிழ்நாட்டு எம்.பி.க்கள் தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் பிற மாநில எம்பிக்களை ஒருங்கிணைத்து அவர்களது கருத்துகளையும் கேட்டு செயலாற்றிட வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

மேலும், இந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்களை வைக்க வேண்டாம் என்று திமுக எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Right Menu Icon