மகன்களுக்காக பொறுமையாக போகிறேன்..பாடகியுடன் தொடர்பா?
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஜெயம் ரவி தன் மனைவி ஆர்த்தியுடனான 15 வருட திருமண வாழ்க்கையில் இருந்து விலகுவதாக சில நாட்களுக்கு முன் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
நட்சத்திர ஜோடிகளாக காதல் பொங்க வலம் வந்த ஆர்த்தி ஜெயம் ரவி தம்பதியின் விவாகரத்து முடிவு ரசிகர்கள், திரை பிரபலங்கள் என பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.ஜெயம் ரவியின் இந்த அறிக்கையையடுத்து, இது முழுக்க முழுக்க அவர் தன்னிச்சையாக எடுத்த முடிவு என்றும் இது தன் ஒப்புதல் இல்லாமல் அவர் வெளியிட்ட ஒன்று என ஆர்த்தி ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இந்த நிலையில், ஜெயம் ரவி ஆர்த்தியை விட்டு செல்வதற்கு கோவா பாடகி கெனிஷாவுடன் அவருக்கு இருக்கும் உறவே காரணம் என சில நாட்களாக செய்திகள் பரவி வருகிறது. இது குறித்து நடிகர் ஜெயம் ரவி தற்போது விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், ‘நான் எடுத்த விவாகரத்து முடிவு அவருக்கு தெரியாது என்பதில் எந்த ஒரு லாஜிக்கும் இல்லை, அவருக்கு ஏற்கனவே இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறேன், அவர்கள் தரப்பில் இருந்து அதுகுறித்து பேசியும் இருக்கிறார்கள்.
இவ்வளவு நடந்தும் தனக்கு இது பற்றி தெரியாது என்று அவர் கூறுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மகன்களுக்காக அமைதியாக இருக்கிறேன், சட்டரீதியாக செல்கிறேன்.பாடகியுடன் என்னை தொடர்புபடுத்தி பேசுவது, பேசியவர்களுக்குத்தான் அசிங்கம். அவர் ஒரு சைக்காலஜிஸ்ட் எத்தனையோ பேரை மனஅழுத்தத்தில் இருந்து காப்பாற்றி இருக்கிறார்.
அவரோடு ஒரு ஹீலிங் சென்டர் ஒன்றை ஆரம்பிக்க நான் முடிவு செய்ததை தகர்க்கும் எண்ணத்தோடு இப்படி பேசுகிறார்களா என்று எனக்கு தெரியவில்லை. அதை யாராலும் தடுக்க முடியாது. அப்படி பேசுவது மிகவும் தவறு, நான் சட்டத்தை நம்புகிறேன் இதற்கு சரியான நியாயம் கிடைக்கும்’ என்று விளக்கமளித்தார்.






