அ.தி.மு.க-வில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கர்..!
புதுச்சேரி முதலியார் பேட்டை முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ-வும் புதுச்சேரி மாநில அம்மா பேரவை செயலாளருமான பாஸ்கரன் இன்று அ.தி.மு.க கட்சியில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டதாக எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அந்தக் கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன்.
மேலும் .அம்மா அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள்.
நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் அன்பழகன் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும் தொகுதி வளர்ச்சிக்கும் பல்வேறு பணிகளை செய்து மக்களிடம் நற்பெயரும் பெற்றுள்ளேன்.
அதே சமயம் தற்போது என்னால் தொடர்ந்து கழகப் பணியாற்ற இயலாத சூழல் உள்ளது. அதனால் நான் வகித்து வரும் புதுச்சேரி மாநில அம்மா பேரவை செயலாளர் மற்றும் கழக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து என்னை முழுமையாக விடுவித்துக் கொள்கிறேன்.
கழகம் சார்பில் முதலியார்பேட்டை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்த பொதுச்செயலாளர் கே.எடப்பாடியார் அவர்களுக்கும், எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் அன்பழகன் ஆகியோருக்கும் இந்நேரத்தில், எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.






