தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்..!
தமிழகத்தில் கொரொனா பரவலை கட்டுபடுத்த 24ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. முழு ஊரடங்கின் போது அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஓடாது. ஆட்டோ, டாக்சிகள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மளிகை, பலசரக்கு கடைகள் ,காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் குளிர்சாதன வசதியின்றி நண்பகல் 12 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பிற கடைகளை திறக்க அனுமதி கிடையாது. டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும். அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்படும். தேனீர் கடைகள் நண்பகல் 12 மணிவரை மட்டுமே இயங்கலாம். உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்ண அனுமதி இல்லை.
சாலையோர கடைகளுக்கு அனுமதி கிடையாது. முடிதிருத்தும் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை இயங்கும். பெட்ரோல் நிலையங்கள் முழுமையாக இயங்கும்.
அம்மா உணவகங்கள் வழக்கம்போல செயல்படும். திருமணங்களில் 50 பேரும், இறுதி சடங்குகளில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதியில்லை.
குடமுழுக்கு மற்றும் திருவிழா நடத்த அனுமதி இல்லை. அனைத்து தனியார் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மருத்துவம், மின்சாரம், குடிநீர், அத்தியாவசிய பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலுக்கு வருவதால் தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.






