மீண்டும் இ-பாஸ் கட்டாயம்! தேர்தல் நேர உத்தரவால் சந்தேகம் கிளம்பும் கட்சிகள்!
தென் மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த ஓராண்டாக இந்தியா உள்பட உலகத்தையே புரட்டிப்போட்ட கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தாலும், குணப்படுத்தக்கூடிய மருந்து கண்டறியப்படவில்லை. தற்போது, உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் சில மாநிலங்களில் குறிப்பாக தமிழகம், மஹாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

எனினும் கொரோனா குறித்த அச்சம் நீங்கி பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசமின்றி நடமாடத் தொடங்கிவிட்டனர். சமூக இடைவெளி என்பதும் அறவே இல்லையென்ற நிலையாகிவிட்டது. கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்தாலும், மக்கள் அதையெல்லாம் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை.
இதற்கிடையே சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தற்போது பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது. எனவே, மீண்டும் மக்கள் கூடுவது, கூட்டங்களில் திரளாக கலந்து கொள்வது என்பது சகஜமாகவிடும். கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தேர்தல் கூட்டங்களும் அடுத்த 20 நாட்களுக்கு அதிகளவில் இருக்கும் என்பது, தொற்று மேலும் தீவிரமாக பரவ வழிவகுக்கும் என்று சுகாதாரத்துறையினர் கவலையடைந்துள்ளனர்.
இச்சூழலில், கொரோனா தாக்கம் அதிகமுள்ள கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று இன்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இனி இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வணிக ரீதியான பயணமாக 3 நாள்களுக்கும் குறைவாக தமிழகம் வருவோருக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்படையும் நேரத்தில் இ-பாஸ் உத்தரவை அறிவித்துள்ளது. அத்துடன், பொதுக்கூட்டம் கூடவும், பிரசார நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுமோ என்று எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர் சந்தேகத்தை கிளப்புகின்றனர்.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத எதிர்க்கட்சி பிரமுகர்கள் சிலர் ‘குற்றம் குற்றமே’ செய்தியாளரிடம் கூறுகையில், ”அடுத்து வரும் 20 நாட்களில்தான் தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டும். தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்திய கட்சிகள், வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிப்பார்கள். இந்த நேரத்தில் கொரோனா பரவல் அதிகைப்பு என்று கூறி, கூட்டங்கள் கூடவோ, பிரசாரம் செய்வதையோ ஆளுங்கட்சி தடை செய்யுமோ என்று கவலை அடைகிறோம்.
பல்வேறு கருத்துக்கணிப்புகளும் திமுகவுக்குத்தான் வெற்றி வாய்ப்பு என்று கூறிவரும் சூழலில், இது ஆளுங்கட்சி கூட்டணிக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, திமுகவின் வெற்றியை தடுக்கும் நோக்கில், மத்தியில் உள்ள பாஜகவின் ஆலோசனையின்படி, இங்குள்ள ஆளுங்கட்சி செயல்படவும் வாய்ப்புள்ளது. தற்போது கொரோனா தொற்று பரவல் என்பது நிச்சயம் கவலை அளிக்கிறது. உண்மையில் இதற்காக தமிழக சுகாதாரத்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்படுவதும், பொதுமக்களும் அரசியல் கட்சிகள் பின்பற்றுவதும் மிக அவசியம். அதை மறுப்பதற்கில்லை.
அதேநேரம், கொரோனா தொற்று நோயை சாக்காக வைத்துக் கொண்டு எதிர்க்கட்சிகளின் பிரசாரம், செயல்பாடுகள், நடமாட்டம் உள்ளிட்டவற்றை ஆளுங்கட்சிகள் தடுக்க முற்படக்கூடாது. எதிர்க்கட்சிகளின் தேர்தல் பணிகள், வாக்கு சேகரிப்புகளை, கொரோனா தொற்று பரவல் தடுப்பு என்ற பெயரில் ஆளுங்கட்சிகள் முட்டுக்கடை போட்டுவிடுமோ என்று அஞ்சுகிறோம். அதற்கு, அரசு இடம் கொடுத்துவிடக்கூடாது; அப்படிச் செய்தால் இன்னும் எதிர்மறையான விளைவுகளை ஆளுங்கட்சிகள் சந்திக்க நேரிடும் என்பதை அவர்கள் உணர வேண்டும்” என்று அவர்கள் கூறினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




