--- --:--:-- --

டுவிட்டரில் மு.க. ஸ்டாலின் பெயரில் போலியான முகவரி உருவாக்கி களங்கம்…! உடனடி நடவடிக்கை தேவை…! போலீஸ் கமிஷனரிடம் திமுக புகார்!!

09

டுவிட்டரில் மு.க.ஸ்டாலின் பெயரில் போலியான ஐ.டி.உருவாக்கி, இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டவர்கள் மீது எடுக்கக் கோரி திமுக சார்பில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

கந்த சஷ்டி கவசம் குறித்தும், தமிழ் கடவுள்கள் குறித்தும், இழிவாக, கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் யூட்யூப்பில் வீடியோ வெளியான விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையாகியுள்ளது. இதற்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்த நிலையில், கறுப்பர் கூட்டம் அமைப்பின் நிர்வாகி சுரேந்தர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த அமைப்பின் அலுவலகத்துக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், தமிழ்க் கடவுள் முருகனை இழிவுபடுத்தியவர்களை திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டிக்காதது ஏன்? என்ற கேள்வி பாஜக தரப்பில் எழுப்பப்பட்டது. அதே வேளையில் கருப்பர் கூட்டத்துக்கு ஆதரவாக திமுக மறைமுகமாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தது. இந்நிலையில், கறுப்பர் கூட்டத்துக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாக ஒரு பதிவும் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையானது.

 

இந்த டுவிட்டர் பதிவு குறித்த 2 நாட்களுக்கு முன் விளக்கமளித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., அந்தப்பதிவு மு.க. ஸ்டாலின் பெயரில் போலியாக ஐ.டி.உருவாக்கி யாரோ வெளியிட்டு திமுகவுக்கு களங்கம் கற்பிக்க முயற்சித்துள்ளனர்.

 

இந்துக்களுக்கு எதிரான இயக்கமாக திமுகவை சித்தரிக்க முயல்கின்றனர். தி மு க விலும் ஒரு கோடி இந்துக்கள் இருக்கின்றனர். முதல்வராக கருணாநிதி இருந்த காலத்தில் கோயில்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுத்தவர், திருவாரூர் தேர் ஓடக்காரணமும் கருணாநிதி தான் என்றெல்லாம் கூறிய ஆர்.எஸ்.பாரதி, முருகரை இழிவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது என்றும் கந்த சஷ்டி கவசம் குறித்த விமர்சனத்திற்கு திமுக தரப்பு கண்டனத்தையும் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் இன்று ஆர்.எஸ்.பாரதி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் திமுக சார்பில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், மு.க.ஸ்டாலின் பெயரில் அடிக்கடி டுவிட்டரில் போலி முகவரியில் பதிவுகள் போடப்பட்டு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. இது குறித்து ஏற்கனவே புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. கடந்த 17-ந் தேதியும் இதே போல் போலி ஐ.டி. மூலம் மு.க.ஸ்டாலின் பெயரில் ஒரு பதிவு போடப்பட்டுள்ளது.

 

அதில்,“கருப்பர் கூட்டத்தின் மேல் தேவை இல்லாத விமர்சனங்கள் எழுந்துள்ளது. தமிழர்களின் குல வழிபாடும், அய்யனாரும், சுடலைசாமி வழிபாடு தான். மாற்றாக பார்பனர்களின் முருகன் வழிபாடல்ல. ஆகையால் கருப்பர் கூட்டத்திற்குதேவையான சட்டஉதவிகளை திமுகசெய்யும்..” என்று பதிவிட்டு திமுகவுக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் களங்கம் ஏற்படுத்த முயற்சி நடந்துள்ளது.

 

இப்படி போலியாக செயல்படுபவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி கொடுத்த புகாரில் வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இன்று தமது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், திமுகவை இந்து விரோதி என சித்தரிக்க முயற்சி நடக்கிறது. இந்து விரோதிகள் எனக் கூறி திமுகவின் வளர்ச்சியை தடுத்துவிடலாம் என்பது அரதப்பழசான சிந்தனை. பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பி ஓபிசி இட ஒதுக்கீட்டை ஒழிக்க முயற்சி நடக்கிறது என மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon