ரஜினியை மிரட்டியதா தி.மு.க? ஆதவ் அர்ஜுனா கருத்து வெறும் கற்பனை – திருமாவளவன் பதில்
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவனிடம், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர முயன்றபோது தி.மு.க மிரட்டியது என்று த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கூறியது குறித்து கருத்து கருத்து தெரிவிக்கையில், “அது வெறும் கற்பனை என்று தான் நான் கருதுகிறேன்.
நடிகர் ரஜினிகாந்த்தைப் பொறுத்தவரையில் அரசியல் அதிகாரம், ஆட்சி போன்றவற்றுக்கு ஆர்வம் காட்டக் கூடியவர் அல்ல அல்லது மயங்கக்கூடியவர் அல்ல. அவர் அந்த நிலையில் இருந்து எல்லாம் வெளியேறிவிட்டார். விலகி நிற்கிறார், அவரை யாரும் ஆசை காட்டி அரசியலுக்குள் இழுக்க முடியாது, அல்லது அச்சுறுத்தி வெளியேற்ற முடியாது என்கிற நிலையை அவர் எட்டிவிட்டார் என்று நான் நம்புகிறேன்.
ரசிகர்களின் விருப்பத்திற்கு இணங்க அவர் கட்சி தொடங்க விரும்பியது உண்மை. ஆனால், இந்த அரசியலில் வலதுசாரிகளின் சங்பரிவார்கள் தலையீடு அவர்களின் ஆதிக்கம் மேலோங்கி வருகிற சூழலில் அது நமக்கு உகந்தது அல்ல என்று தீர்க்கதரிசனமாக உணர்ந்து அதை அவர் கைவிட்டு விட்டார் என்பதுதான் உண்மை.
அவரை நாங்கள் நேரிலே சந்தித்து அவருடன் உரையாடியதில் இருந்து அவரைப் புரிந்து அதிலிருந்து நான் சொல்லுகிற கருத்து இது. எனவே அவரை தி.மு.க அச்சுறுத்தியது என்பது கற்பனை, அதற்காக அவர் அச்சப்பட்டு பின்வாங்கினார் என்பதும் கற்பனை. அது ரஜினி அவர்களின் ஆளுமையை கொச்சைப்படுத்தக்கூடிய ஒரு விமர்சனம்.” என்று கூறினார்.





