“தமிழகம் முழுவதும் நாளை முதல் ஒரு வாரத்திற்கு 144 தடை!!” மாவட்ட எல்லைகளையும் மூட உத்தரவு!!
கொரானோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நாளை முதல் ஒரு வாரத்திற்கு 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களின் எல்லைகளும் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சில மாநிலங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கான சேவைகளைத் தவிர மற்ற அனைத்து சேவைகளையும் முடக்கியுள்ளன. சில மாநிலங்களில் 144 உத்தரவு மட்டுமின்றி புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம் மாவட்டங்களை தனிமைப்படுத்தி முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில், தலைமை செயலாளர், சுகாதாரத்துறை அமைச்சர், மூத்த அமைச்சர்கள், செயலாளர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் கொரானோ பரவலை தடுக்க என்ன விதமான கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது, கொரானோ வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தார். மேலும் நாளை மாலை 6 மணி முதல் அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூடவும் உத் தரவிடப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார்.
அத்தியாவசிய பொருட்களான பால், மளிகை, காய்கறி போக்குவரத்து தவிர அனைத்து பிற போக்குவரத்தும் தடை செய்யப்படும் என்றும் பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தும் முடக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் யாரும் வெளியில் வரக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரானோ வைரஸ் தொற்று காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், மேலும் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என தெரிவித்த முதல்வர், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள் தாங்களாகவே முன்வந்து சோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும், இல்லாவிட்டால் அவர்களது பாஸ்போர்ட் முடக்கப்படும் என எச்சரித்தார்.
மேலும், இந்த 144 தடை உத்தரவால் என்னென்ன கட்டுப்பாடுகள், பாதிக்கப்படுவோருக்கு நிவாரண உதவி தொடர்பான அறிவிப்பு உள்ளிட்டவை பற்றிய விரிவான விளக்கங்களுடன் அரசு சார்பில் மாலை 6 மணிக்கு அறிவிப்பு வெளியாகும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இது போன்று ஒரு வார காலத்திற்கு 144 தடை உத்தரவும், கடும் கட்டுப்பாடுகளும் முன்னெப்போதும் விதிக்கப்படாத நிலையில், இந்த அறிவிப்பு சாமான்ய மற்றும் அன்றாட வருவாய் ஈட்டுவோர் இடையே பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனால் கேரளா, ஆந்திரா போன்ற மாநில அரசுகள் அறிவித்தது போல் மக்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்படாத அளவுக்கு நிவாரண உதவிகளை தமிழக அரசு அறிவிக்குமா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.






