ஹத்ராஸ் கொடூர வழக்கு விசாரணையை சிபிஐ ஏற்றுக் கொண்டுள்ளது..!
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராசில் 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கு விசாரணையை சிபிஐ ஏற்றுக்கொண்டுள்ளது. ஹத்ராசை சேர்ந்த பட்டியலினப்பெண் கடந்த மாதம் படு காயங்களுடன் மீட்கப்பட்டார்.
கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இரவோடு இரவாக சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்ட பெண்ணின் உடலை தங்களது அனுமதியின்றி காவல் துறையினரே எரியூட்டியதாக அவரது குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இருந்தனர்.
நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஏற்கனவே பரிந்துரை செய்திருந்தார். இந்நிலையில் ஹத்ராஸ் வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏற்று உள்ளதாக மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்த பிறகும் உரிய அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்த வழக்கை அலகாபாத் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்கிறது இதற்காக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் நாளை நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.






