--- --:--:-- --

அதிமுக கூட்டணியில் அமமுக? அதிர வைக்கும் அரசியல் நகர்வு! பாஜக அழுத்தத்தால் அதிமுக தவிப்பு!!

EPS TTV

டிடிவி தினகரனின் அமமுகவை, அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டுமென்பதில் பாஜக பிடிவாதமாக இருப்பதால், அதிமுக தலைமை செய்வதறியாமல் திகைத்துப் போயுள்ளது.

 

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் என்று திடுதிடுப்பென தேர்தல் ஆணையம் அறிவித்தது; தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே இருப்பதால், திமுக, அதிமுக உள்ளிட்ட முதன்மைக் கட்சிகள் மட்டுமின்றி, அனைத்துக் கட்சிகளும் தேர்தல் வேலையில் சுறுசுறுப்பாக இறங்கிவிட்டன. அதிமுக அணி, திமுக அணி என்று பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

 

அதேநேரம், சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகிவிட்ட நிலையில், டிடிவி தினகரனின் அமமுக, வரும் தேர்தலில் எந்த மாதிரி களமிறங்கப் போகிறது? யாருடன் கூட்டணி அமைக்கவுள்ளது என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் உள்ளது. அதிமுக – அமமுக இணையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காரணம், அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு பற்றிய பேச்சு வார்த்தையைவிட மிகவும் சூடு பறக்க விவாதிக்கப்பட்டு வருவது, அமமுக விவகாரம் தான். அதிமுஅக் கூட்டணிக்குள் எப்படியும் அமமுகவை கொண்டு வர வேண்டும் என்று பாஜக தலைமை தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறதாம்.

 

பிப்ரவரி 28ம் தேதி சென்னையில் தன்னை சந்தித்த முதல்வர் இ.பி.எஸ் இருவரிடமும், அமைச்சர் அமித்ஷா ஒரு சர்வே புள்ளி விவரங்களை காண்பித்தாராம். அதன்படி, அ.தி.மு.க., கூட்டணிக்கு, 66 தொகுதிகளில் நிச்சயமாக வெற்றி கிடைக்கும்; 47 தொகுதிகளில் நிச்சயமாக வெற்றி கிடைக்காது; இழுபறியில் உள்ள, 121 தொகுதிகளில் சரியாக திட்டமிட்டு கடினமாக உழைத்தால், கணிசமானதை கைப்பற்ற வாய்ப்பு இருக்கிறது என்பது, சர்வேக்களின் சாராம்சம்.

 

பின்னர் இருவரிடமும் பேசிய அமித்ஷா, திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்றால் அதிமுகவுக்கு வர வேண்டிய ஓட்டுகள் சிதறக்கூடாது; அதற்கு அதிமுக கூட்டணிக்குள் அமமுகவை கொண்டு வர வேண்டும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டாராம். தேர்தலுக்கு இன்னமும் ஒருமாதம் இருக்கிறது; நீங்கள் ஒத்துழைத்தால் நிச்சயம் திமுகவை வீழ்த்தலாம். அமமுகவை இணைக்க உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், எங்களுக்கு கூடுதல் தொகுதி தாருங்கள், அதில் இருந்து அவர்களுக்கு கொடுக்கிறோம். தி.மு.க.,வை தடுக்க இந்த ஏற்பாடு அவசியம் என்று அமித்ஷா உறுதியாக சொல்லிவிட்டு போய்விட்டார்.

 

இதையடுத்து அதிமுக தலைமைக் கழகத்தில் மார்ச் 1 ஆம் தேதி காலை, அதிமுக முக்கிய புள்ளிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். பின்னர், அன்று மாலையே சென்னை நட்சத்திர ஹோட்டலில் மீண்டும் அதிமுக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, எம்.பி. கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகிய நான்கு பேர் குழு, பாஜக தலைவர்கள் முருகன், அண்ணாமலை, பொன்னார், கே.டி.ராகவன், கேசவ விநாயகம் ஆகிய ஐந்து பேர் குழுவுடன் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் பேசியுள்ளனர். நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் தொகுதிப் பங்கீடு பற்றிப் பேசியதைவிட அமமுக-வை கூட்டணியில் சேர்ப்பது பற்றிதான் அதிகம் விவாதிக்கப்பட்டது.

 

பாஜக தரப்பில், அமமுகவை என்ன அதிமுகவிலா சேர்க்கச் சொன்னோம்? கூட்டணியில்தானே இணைக்க சொல்கிறோம். இதனால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் வராது என்று தெரிவிக்கப்பட்டதாம். அமமுகவை கூட்டணிக்குள் சேர்க்க வேண்டும் என்று பாஜக தரப்பு தொடர்ந்து அளித்து வரும் அழுத்தத்தால், என்ன செய்வதென்றே புரியாமல் அதிமுக தலைமை தவித்து வருவதாக, அக்கட்சி வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

 

இதற்கிடையே, அமமுக – அதிமுக இணைப்பு குறித்து, இன்று சென்னையில் செய்தியாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த டிடிவி தினகரன், “ஊகங்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. அமமுக தலைமையில் வலுவான கூட்டணி நிச்சயம் அமையும். எங்களுடைய ஒரே இலக்கு திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது” என்றார். திமுக ஆட்சிக்கு வராமல் இருக்க அதிமுகவுடன் இணைவீர்களா என்ற கேள்விக்கு, “ஒரு சில நாட்களில் எங்களின் முடிவைத் தெளிவாக அறிவிப்போம்” என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon