அவினாசியப்பா.. அருள்காட்டப்பா! வண்டிப்பேட்டை சர்ச்சைக்கு தேவை நிரந்தரத்தீர்வு.. வருவாய்த்துறை அலட்சியத்தால் பக்தர்கள் சோர்வு!
புகழ்பெற்ற அவினாசி கோவில் தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெறும் சூழலில், அங்குள்ள வண்டிப்பேட்டை இடம் தொடர்பான பிரச்சனைக்கு, வருவாய்த்துறை நிரத்தரத் தீர்வு ஏற்படுத்த வேண்டும்; வருவாய்த்துறை அலட்சியமாக இருந்தால், வருங்காலத்தில் பெரும் தலைவலியாக மாறலாம் என்று பக்தர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
திருப்பூர் மாவட்டம் அவினாசியில், கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை சிறப்பு பெற்ற பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக, கோவில் தேர்த்திருவிழா நடைபெறவில்லை.
கொரோனா தாக்கம் குறைந்ததால், இந்தாண்டு தேர்த்திருவிழா நடைபெறுகிறது. அதன்படி, மே 5ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியுள்ளது. முக்கிய நிகழ்வான தேரோட்டம், மே 12,13, 14 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. திருவிழா மற்றும் தேரோட்டம் குறித்து, அண்மையில் தாசில்தார் ராகவி தலைமையில் ஆலோசனை கூட்டம், தாலுகா அலுவலகத்தில் நடந்தது.
கோவில் நிர்வாகத்தினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், நெடுஞ்சாலை துறையினர் மற்றும் பலர் பங்கேற்ற இக்கூட்டத்தில், திருவிழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மாற்று வழியில் வாகனங்களை திருப்பி விடுவது, தீயணைப்புத் துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
அவினாசி தேர்த்திருவிழா ஏற்பாடுகள் ஒருபுறம் மும்முரமாக நடந்து வரும் நிலையில், அவினாசி கோவிலுக்கு அருகாமையில் இருக்கும், வண்டிப்பேட்டை இடம் தொடர்பான பிரச்சனைகளும் புகையத் தொடங்கின.
இடத்தை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் ஆக்கிரமிக்க முற்படுவதாக ஒரு சாராரும், மற்றொரு தரப்பினரோ, இல்லை கோவில் திருப்பணி செய்ய எங்களுக்கு காலகாலமாக ஒதுக்கப்பட்ட இடம் என்றும் கூறி வருகின்றனர்.

காலங்காலமாக, அவினாசி தேர்த்திருவிழாவுக்கு வரும் மாட்டு வண்டிகள் மற்றும் குதிரை வண்டிகள் போன்றவை, கோவில் அருகே உள்ள (க.எண்:-85 /B2=4.07 ஏக்கர்) நிலத்தில் நிறுத்தப்பட்டு வந்தன. இதனாலேயே இந்த பகுதியை, வருவாய்த்துறை மற்றும் கோவில் ஆவணங்களில் வண்டிப்பாதை எனவும் வண்டிப்பேட்டை என்றும் இன்றளவு குறிப்பிடப்படுகிறது.
கடந்த 2009 ம் ஆண்டு, திமுக ஆட்சியில் கோவை செம்மொழி மாநாட்டின் போது, சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அந்த நேரத்தில் வண்டிப்பேட்டை பகுதியில் இருந்த 2 ஏக்கருக்கும் மேலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அங்கிருந்த தேவர் திருமண மண்டபம் மற்றும் சைக்கிள் ஸ்டேண்ட் உள்ளிட்டவை அகற்றப்பட்டு, அந்த இடம் மீண்டும் வருவாய்த்துறை வசம் கொண்டு வரப்பட்டது.
இந்த இடமானது, தற்போது வரை வருவாய் துறை வசம் உள்ள சூழலில், ஏற்கனவே இந்த இடத்தை ஆக்கிரமித்தவர்கள், மீண்டும் ஆக்கிரமிக்க முயன்று வருகின்றனர். ஆக்கிரமிப்பு இடத்தை பாதுகாக்க வேண்டும். பல கோடி ரூபாய் மதிப்புள்ள வண்டிப்பேட்டை நத்தம் புறம்போக்கு இடத்தை, வாகனம் நிறுத்துமிடமாக பயன்படுத்த வேண்டும்.
ஆனால், அந்த இடத்தை, ஒரு குறிப்பிட்ட சமூகமும் உரிமை கொண்டாட முற்படுகிறது. இதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சிலரும் உடந்தையாக உள்ளனர். இதனால் தான் இதுவரை வண்டிப்பேட்டை இடத்தில் ‘வருவாய்த்துறை இடம்’ என்று அறிவிப்பு பலகை கூட அதிகாரிகளால் வைக்கப்படவில்லை. அந்த இடத்தை மீட்டு, கோவிலுக்கு வரும் வாகனங்கள் நிறுத்தப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு, வழக்கறிஞர் சத்தியமூர்த்தி கூறினார்.
பட்டா புறம்போக்கு இடமாக இருந்த போதும், காலம் காலமாக இது எங்களது சமூகத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட பகுதியாகும். பட்டா கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இதுவரை இருக்கிறோம். தற்போது இப்பகுதியை சுத்தம் செய்து, தேர்த்திருவிழா தெப்ப உற்சவம், அலங்காரப் பணிகளுக்கு பயன்படுத்த உள்ளோம்.
இடத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் நாங்கள் உரிமை கோரவில்லை. காலாகாலமாக அவினாசி கோவிலுக்கு அந்த இடத்தில் மேற்கொள்ளப்படும் இறைப்பணிக்கு, அந்த இடத்தை பயன்படுத்தும் எங்களது உரிமையைத்தான் கேட்கிறோம். வருங்காலத்தில் பிரச்சனை ஏற்படாமல் இருக்க, வருவாய்த்துறை பட்டா செய்து தர வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
பக்தர்கள் கூறுகையில், இட விவகாரத்தில், வருவாய்த்துறை அலட்சியமாக இருந்தால், வருங்காலத்தில் பெரும் தலைவலியாக மாறலாம். இவ்வளவு காலம் தாழ்த்தியதே கவலைக்குறியது என்றனர்.
சர்ச்சைக்குரிய வண்டிக்காரன்பேட்டை இடத்தை உரிமை கொண்டாடும் விவகாரத்தில் அரசு நிரத்தரத் தீர்வை ஏற்படுத்த வேண்டும். ஒன்று கோவில் பெயரில் பட்டா, அல்லது குறிப்பிட்ட சமுதாயத்தவர்களுக்கு பட்டா உண்டு – இல்லை என்பதை தெளிபடுத்த வேண்டும். குறிப்பிட்ட சமூகத்தவர்கள் பாரம்பரியமாக அந்த இடத்தில் மேற்கொண்டு வரும் கோவில் விழா தொடர்பான பணிகள், அவர்களது உரிமை என்பதால், அதில் அரசோ, வேறு எவருமோ தலையீடு செய்யக்கூடாது.
இந்த விவகாரத்தில், வருவாய்த்துறையினர், இந்து சமய அறநிலையத்துறையினர் கலந்து ஆலோசித்து, நிரத்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதுவே, இனி வரும் காலங்களில் வண்டிக்காரன்பேட்டை இடம் தொடர்பாக பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க உதவும் என்பது பக்தர்களின் கருத்தாக உள்ளது.
தாசில்தார் கூறுவது என்ன?

அவர் கூறுகையில், “வண்டிக்காரன்பேட்டை பகுதியில், காலகாலமாக குறிப்பிட்ட சமூகத்தினர் என்ன செய்து வந்தார்களோ, அதை மட்டுமே அவர்கள் இப்போதைக்கு செய்து கொள்ள வேண்டும்; அதை தவிர மண்டபம் கட்டுவது, சமுதாயத்தவர்கள் வேறுவகையில் பயன்படுத்துவது என்று, தனிப்பட்டு வேறு எதையும் செய்யக்கூடாது.
தேர்த்திருவிழாவின் போது தெப்பத்துக்கு பூ அலங்காரப் பணிகள் செய்வது, சீர் கொண்டு வருவது போன்ற வழக்கமான, காலங்காலமாக மேற்கொள்ளும் சம்பிரதாயப் பணிகளை, அவர்கள் தரப்பில் செய்து கொள்ளலாம். கோவில் தேர்த்திருவிழா முடிந்த பிறகு, இந்த விவகாரத்தை கொண்டு சென்று, வண்டிக்காரன்பேட்டை இடப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும். இப்போதை முதல்பணி, தேர்த்திருவிழாவை சிறப்பாக நடத்தி முடிப்பதுதான்” என்றார்.





