தர்மபுரி மாவட்டத்தில் சிறுவனை கைகளால் மலம் அள்ள வைத்த நபர் கைது..!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பட்டியலின மாணவரை கையால் மலம் அள்ள வைத்த ராஜசேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோடாரம்பட்டி கிராமத்தில் கடந்த 15ஆம் தேதி விவசாய நிலம் அருகே இயற்கை உபாதையை கழிக்க பள்ளி மாணவனை ராஜசேகர் என்பவர் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

 

சாதிப் பெயரைச் சொல்லி ஆபாசமாக திட்டியதோடு மலத்தை கைகளாலேயே அல்லவும் ராஜசேகர் வற்புறுத்தியுள்ளார். அடி தாங்க முடியாத சிறுவன் தன் கைகளாலேயே மலத்தை அள்ளி வீசினான்.

 

இந்த சமூகம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்த மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் 4 வாரங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ராஜசேகர் கைது செய்யப்பட்டுள்ளார்.


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியுள்ளது..!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 80 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 2,626 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

 

ஒரே நாளில் 4 ஆயிரத்து 965 பேருக்கு நோய் கண்டறியப்பட்ட நிலையில் அவர்களில் ஆயிரத்து 130 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். எனினும் சென்னையில் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது ஆறுதலான விசயம். பிற மாவட்டங்களில் 3 ஆயிரத்து 835 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் இதுவரையிலான பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 643 ஆக உள்ளது. அதில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 670 பேர் டிஸ் ஜார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 70.12 விழுக்காடாக இருக்கிறது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,626 ஆக அதிகரித்துள்ளது. பலியானோர் விகிதம் 1.45 விழுக்காடாக உள்ளது.

 

51 ஆயிரத்து 344 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னைக்கு அடுத்ததாக திருவள்ளூர் மாவட்டத்தில் 366 பேரும், விருதுநகர் மாவட்டத்தில் 360 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 269 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 262 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 256 பேரும் ஒரே நாளில் நோய்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.


இந்தியாவில் தடை செய்யப்பட்ட 59 சீன செயலிகளுக்கு நிரந்தர தடையா?

தடை செய்யப்பட்ட டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் தொடர்ந்து செயல்பட்டால் நிறுவனங்கள் மீது தண்டனைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

 

இது தொடர்பாக தடை செய்யப்பட்ட செயலிகளின் நிறுவனங்களுக்கு மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதன் காரணமாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில் குறிப்பிட்ட செயலிகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து கிடைப்பது மற்றும் செயல்படுவது சட்டவிரோதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

முன்னதாக அந்நிறுவனங்களுக்கு 79 கேள்விகள் அடங்கிய பட்டியலை அனுப்பி இருந்த மத்திய அரசு இன்றைக்குள் பதில் அளிக்காவிட்டால் 59 செயல்களும் இந்தியாவில் நிரந்தரமாக தடை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தது.


சுஷாந்த் தற்கொலைக்கு இது காரணமா?

தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் பைபோலார் டிசார்டர் நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சுஷாந்த் தற்கொலை வழக்கை விசாரித்து வரும் மும்பை பாந்திரா போலீசார் அவரது நண்பர்கள், நடிகர், நடிகைகள் என ஏராளமானோர் இடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

அந்த வகையில் சிகிச்சை அளித்த 3 மனநல மருத்துவர்கள் மற்றும் சைக்கோதெரபிஸ்ட் ஒருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மிகுந்த மனஅழுத்தத்தில் இருந்து வந்த சுஷாந்த் அடிக்கடி மருத்துவரை மாற்றியதும் இரண்டு மாதங்களுக்கு மேலாக உட்கொண்டு வந்த மருந்துகளை பாதியில் நிறுத்தியது தெரியவந்தது.

 

மேலும் அவர்களில் ஒரு மருத்துவர் பைபோலார் டிஸ்ஆர்டர் நோய் இருந்ததாக அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.


வீடியோ கேம் விளையாடுவதை கண்டித்ததால் 12 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை..!

மும்பையில் நீண்ட நேரம் செல்போனில் வீடியோகேம் விளையாடிய சிறுவனை தாய் கண்டித்ததால் 12 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டான். சிவாஜி நகரை சேர்ந்த சிறுவன் தொடர்ந்து தனது செல்போனில் கேம் விளையாடுவதால் செல்போனை பறித்துக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்துமாறு திட்டியுள்ளார்.

 

இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் தனது அறைக்குள் சென்று கதவை பூட்டினான். நீண்ட நேரமாகியும் சிறுவன் வெளியே வராததால் பெற்றோர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது சிறுவனின் தூக்கில் தொங்கியவாறு கிடந்துள்ளார்.

 

இதையடுத்து சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்‌எல்‌ஏக்கள் மீது 24ஆம் தேதி வரை நடவடிக்கை எடுக்க தடை..!

சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்‌எல்‌ஏக்கள் மீது 24ஆம் தேதி வரை சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பைலட் அணியினரின் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி தப்புமா என்பது குறித்து வெள்ளிக்கிழமை தெரியவரும்.

 

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் சச்சின் பைலட்டிடமிருந்து துணை முதலமைச்சர் மற்றும் கட்சியின் மாநில தலைவர் பதவிகள் பறிக்கப்பட்டன. மேலும் பைலட் மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேருக்கு எதிராக பேரவை தலைவர் தகுதிநீக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

 

இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தும் அவர்கள் பங்கேற்கவில்லை என காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த நோட்டீஸ் அனுப்பியிருந்தார். தகுதிநீக்க நோட்டீஸை எதிர்த்து சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தை நாடினர்.

 

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் வரும் 24ம் தேதி வரை ராஜஸ்தான் சட்டமன்ற பேரவை தலைவர் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டனர். இந்த வழக்கில் வரும் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படுகிறது. பைலட் மற்றும் 18 பேரின் சட்டமன்ற உறுப்பினர் பதவி தப்புமா என்பதற்கு விடை கிடைத்துவிடும்.

 

இதனிடையே வழக்கு விசாரணை ஒருபுறமிருக்க ஜெய்ப்பூரில் உள்ள சொகுசு விடுதியில் கெலாட் தலைமையில் மூன்றாவது முறையாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

 

30 சட்டமன்ற உறுப்பினர்கள் தன் பக்கம் இருப்பதாக கூறிய பைலட் தற்போது மொத்தம் 10 பேர் மட்டுமே உள்ளனர். இப்போதைய சூழலில் ஆட்சியைத் தக்க வைப்பதற்கு தேவையான எண்ணிக்கையை விட கூடுதல் உறுப்பினர்கள் கெலாட் பக்கம் இருப்பதால் தகுதிநீக்க விவகாரத்தில் பைலட்டுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தாலும் ஆட்சிக்கு எந்த பிரச்சினையும் இருக்காது என காங்கிரஸ் அரசு நம்புகிறது.


மாநிலங்களவை உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்பு..!

மாநிலங்களவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்க உள்ளனர். மாநிலங்களவையில் 61 காலி இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. தமிழகத்தில் 6 பேர் உட்பட 42 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 10 மாநிலங்களில் 19 இடங்களுக்கு தேர்தல் மூலம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

 

மாநிலங்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக சார்பில் கேபி முனுசாமி, தம்பிதுரை, ஜி கே வாசன் மற்றும் திமுக சார்பில் திருச்சி சிவா, என்‌ஆர் இளங்கோ மற்றும் அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் போட்டியின்றி வெற்றி பெற்றனர்.

 

இன்று காலை 11 மணிக்கு நடைபெற இருக்கும் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத புதிய உறுப்பினர்களுக்கு மழைக்காலக் கூட்டத் தொடரின்போது பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும். அதேபோல பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உறுப்பினர்களில் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். சமூக இடைவெளியுடன் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும்.


ஸ்ட்ரெச்சரில் தள்ளி செல்ல லஞ்சம் கேட்டதால் பேரன் தாத்தாவை தள்ளி சென்ற சம்பவம்..!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் சிகிச்சைக்கு அழைத்து செல்ல மருத்துவமனை ஊழியர் லஞ்சம் கேட்டதால் 6 வயது சிறுவன் தனது தாத்தாவை ஸ்ட்ரெச்சரில் தள்ளிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. டியோரிய மாவட்ட மருத்துவமனையில் முதியவர் ஒருவர் காயத்திற்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டார் .

 

இந்நிலையில் அங்கு உதவியாளராக இருந்த ஊழியர் முதியவரை ஒவ்வொரு முறையும் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல 30 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் முதியவரின் மகள் அவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து இழுத்து செல்ல பேரன் பின்னால் தள்ளி சென்றான்.

 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர் பணம் கேட்ட வார்டு உதவியாளர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.


பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க அரசு தயார்!

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க மேலும் பல நடவடிக்கைகளை அறிவிக்க அரசு தயாராக இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 

இந்தியா ஐடியா உச்சி மாநாட்டில் காணொளி மூலம் கலந்து கொண்டு உரையாற்றிய நிர்மலா சீதாராமன் பொருளாதார வளர்ச்சியை குறிக்கும் வகையில் மின்சாரம், எரிபொருள், சரக்கு போக்குவரத்து போன்றவை அதிகரித்து வருவதாக கூறினார்.

 

பொருளாதாரத்தை ஊக்குவிக்க நாட்டின் மொத்த உற்பத்தியில் 10% அளவுக்கு திட்டங்களை அறிவித்து இருப்பதாகவும் அந்த அறிவிப்புகள் பலன் அளிக்கத் தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சிக்காக மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க அரசு தயங்காது என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.