பச்சை துரோகம் செய்யாதிங்க… யாரை சொல்கிறார் விஜய் சேதுபதி?
தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது பச்சை துரோகம்; எனவே அனைவரும் நாளை தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சட்டசபைக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்து தேர்தல் ஆணையம் ஆயத்தமாக உள்ளது. கொரோனா தொற்று பரவும் அச்சம் காரணமாகவும், வெயில் காலம் என்பதாலும் வாக்குப்பதிவு குறையுமோ என்ற கருத்து நிலவுகிறது.
இதனிடையே, நம் ஒரு ஓட்டால் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப்போகிறது என்ற அலட்சியப் போக்காலும் சில வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்வதில்லை. அல்லது வேறு பணிச்சூழலால் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
அதேபோல், கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வாக்களிப்பதை வலியுறுத்தி திரைத்துறை பிரபலங்களும் கருத்து தெரிவித்துவருகின்றனர். அவ்வகையில் நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
அன்பார்ந்த வாக்காளர்களே நாம் ஆவலுடன் எதிர்பார்த்த தேர்தல் வந்துருச்சு வழக்கமா தேர்தல் நேரத்தில யார் வந்தா நமக்கென்னா, இல்லை காசு கொடுக்கிறவங்களுக்கு ஓட்டுபோடுவோம், இல்லை ஓட்டுபோட்டு ஒண்ணும் ஆகப்போறதில்ல என்கிற மனநிலையை ஓரமா தூக்கி வச்சுட்டு நமக்காக இல்லை நம்ம குழந்தைக்களுக்காக, எதிர்கால சந்ததிக்காக நிச்சயமா ஓட்டு போடுங்க.
காசு வாங்கிட்டு ஓட்டுபோடுவது, காசுக்காக வாக்கை விற்பதை எப்படி துரோகமோ அதை விட வாக்களிக்காமல் இருப்பது பச்சை துரோகம் உங்களுக்கு பிடித்தவர்களோ, பிடிக்காதவர்களோ என்பதை காட்டிலும் அவர்களுக்கு வாக்களிப்பதால் நாட்டுக்கு என்ன நன்மை என்பதை அறிந்து அனைவரும் தவறாம வாக்களியுங்கள் என்று விஜய் சேதுபதி பேசியுள்ளார்.





