பள்ளி மாணவர்கள் சென்ற வாகனத்தை தாக்கிய ஒற்றை யானை..!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மலை கிராம பகுதியில் பள்ளி மாணவர்கள் சென்ற வாகனத்தை யானை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜவ்வாது மலை குறிப்பாக ஒரு கிராமத்தில் உள்ள பள்ளியின் புதிய கட்டிட திறப்பு விழாவில் ஆளுநர் இன்று பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்ட மலை கிராம பகுதி பள்ளி மாணவர்கள் இரவு நேரத்தில் வாகனம் ஒன்றில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். காவலூர் அடுத்த அருணாச்சல கொட்டாய் பகுதி வழியே சென்ற பொழுது அங்கு சாலையை மறித்து நின்ற ஒற்றை யானை வாகனத்தை துரத்தியுள்ளது.
உடனடியாக பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதில் சில மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. சாலையில் புத்தகங்கள் சிதறி கிடக்க அங்கிருந்த வாகனத்தை யானை சேதப்படுத்தியது.
பைக்கில் சென்றவர்களையும் யானை துரத்திய நிலையில் அதிலிருந்தவர்கள் வாகனத்தை விட்டுவிட்டு தப்பி ஓடினார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை மற்றும் வனத்துறையினர் மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து மாணவர்களை அனுப்பிவைத்தனர். தொடர்ந்து யானையை வனப்பகுதிக்குள் அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.






