--- --:--:-- --

ஊருக்கே ராஜா… உள்ளூரில் கூஜா! ராஜகண்ணப்பன் – பிடிஓ ‘லடாய்’ பின்னணி…ஆட்டம் போட்ட மந்திரியை அடக்கிய முதல்வா்!

mcms

ராஜகண்ணப்பன் இலாகா மாற்றம் ஏன்? பரபரப்பை கிளப்பிய அரசு அதிகாரியின் புகார் தொடர் சர்ச்சையால் அதிரடி காட்டிய ஸ்டாலின்!

 

தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி, அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்திய போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் செய்து, முதல்வர் ஸ்டாலின் அதிரடி காட்டியுள்ளார். இதனால், மற்ற அமைச்சர்களும் ஆடிப்போய் உள்ளனர். இது போதாது என்று, எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

 

கடந்த 1991 முதல் 1996 வரையிலான ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் ராஜ கண்ணப்பன். ஆட்சியை அ.தி.மு.க இழந்ததும், அங்கிருந்து விலகி, 2001ல் மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியைத் துவங்கினார்; அதே சூட்டோடு தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தார். இளையான்குடி தொகுதியில் நின்று மண்ணை கவ்வினார். பிறகு கட்சியை கலைத்து, தி.மு.கவில் இணைந்தார். 2009ல் மீண்டும் அ.தி.மு.கவில் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி கண்டார்.

 

பதவி சுகத்துக்காக கட்சி மாறியவர்

 

கடந்த 2011 தேர்தலில் அ.தி.மு.க சார்பில் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்ட கண்ணப்பனுக்கு, இம்முறையும் அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சுதாரித்துக் கொண்ட ராஜகண்ணப்பன் 2019ல் மீண்டும் தி.மு.கவுக்கு தாவினார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், முதுகுளத்தூரில் வெற்றி பெற்றார்.

 

பதவி சுகத்திற்காக திமுக – அதிமுக என்று மாறி மாறி சென்று, இப்போது திமுகவில் உள்ள ராஜகண்ணப்பனுக்கு, ஸ்டாலின் அமைச்சரவையில், முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்துத்துறை ஒதுக்கப்பட்டது. ஆனால், பதவி தந்த போதையில் ஆட்டமாடினார்; இதனால் பல சர்ச்சைகளில் சிக்கினார். இதுவே இப்போது அவருக்கு சறுக்கலை தந்துள்ளது.

 

மார்ச் 29ம் தேதி, ராஜகண்ணப்பனிடம் இருந்த போக்குவரத்துத்துறை பறிக்கப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றி, முதல்வர் ஸ்டாலின் அதிரடி காட்டியுள்ளார். ராஜகண்ணப்பன் அடக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இருக்கும் முக்கிய விவகாரம், முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் பகீரங்கமாக கூறிய பரபரப்பு புகார்தான்.

 

சூட்டை கிளப்பிய பிடிஓ புகார்

 

முதுகுளத்தூர் பிடிஓ ராஜேந்திரன், மார்ச் 28ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து, முதுகுளத்தூரில், அமைச்சர் ராஜகண்ணப்பன், தன்னை சாதி பெயரை சொல்லி திட்டியதாக பரபரப்பு புகாரை தெரிவித்தார். அவர் கூறியதாவது: நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு சிவகங்கையில் உள்ள அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் இல்லத்துக்கு, நானும் எனது நண்பருமான பிடிஓ அன்புக்கண்ணனும் சென்றோம்.

 

அமைச்சரின் இல்லத்துக்குச் சென்றவுடன், அமைச்சருக்கு நான் வணக்கம் தெரிவித்தேன். பதிலுக்கு அவர் வணக்கம் கூறவில்லை. என்னைப் பார்த்தவுடன் அமைச்சர், ஏன்யா நீ ஒரு …….. பிடிஓ, சேர்மேனுக்கு மட்டும்தான் நீ சப்போர்ட் பண்ணுவ, சேர்மேன் சொல்வதை மட்டும்தான் நீ கேட்ப, மற்றவர்கள் யார் சொன்னாலும் நீ கேட்க மாட்ட, யார் போன் செய்தாலும் எடுக்க மாட்ட, நீ ஒரு ……… சேர்ந்த பிடிஓ தானே?


“நாயை விட கேவலமாக நடத்தினர்”

 

இந்த பிளாக்ல, நீ ….. பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் உன்னை வைத்துள்ளேன். உன்னை உடனே டிரான்ஸ்பர் செய்து இந்த மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டத்துக்கு மாற்றிவிடுவேன் என்றார். அத்துடன், முதன்மைச் செயலாளர் அவரது பெயரையும் உச்சரித்து, பலமுறை என்னை …… பிரிவைச் சேர்ந்த பிடிஓ என்பதைக் குறிப்பிட்டு அமைச்சர் ராஜகண்ணப்பன் ஒருமையில் பேசினார்.

 

உடனடியாக என் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உடனே என்னை டிரான்ஸ்பர் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி, அமைச்சரின் உதவியாளர் கண்ணனிடம் கூறினார். மேலும், கடுமையாக என்னையும், அன்புக்கண்ணனையும் பேசி “வெளியே போங்கய்யா” என்று நாயை விட கேவலமாக அமைச்சர் நடத்தினார்.

 

எனக்கு 57 வயதாகிறது. இதுவரை என்னுடைய அனுபவத்தில் இந்த அளவு நான் மனக்காயம் பட்டதில்லை. நேற்று முழுவதும் என்னால் சாப்பிட முடியவில்லை. இரவு தூக்கம் வரவில்லை. காலையில் எழுந்து வாக்கிங் சென்றுவிட்டு மாவட்ட ஆட்சியரை சந்திக்க சென்றேன். துணை ஆட்சியரை சந்திக்கச் சென்றேன். முடியவில்லை. மீண்டும் முதுகுளத்தூர் ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து என் பணியை செய்து கொண்டிருக்கிறேன்” என்று தனது மனப் புழுக்கத்தை கொட்டித் தீர்த்தார். அரசின் உயர் அதிகாரி ஒருவரே, அமைச்சருக்கு எதிராக சாதிப் புகாரை தெரிவித்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக வட்டாரத்தில் இது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


உள்ளூரில் மவுசு இல்லாத மந்திரி

 

இதனிடையே, அமைச்சருக்கு பிடிஓ ராஜேந்திரன் மீது கோபம் ஏற்பட என்ன காரணம் என்று “குற்றம் குற்றமே” தரப்பில் விசாரித்தோம். இதில் பல பகீர் தகவல்கள் நமக்கு கிடைத்தன.

 

முதுகுளத்தூர் ஒன்றியத்தில் 2019 உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பெரும்பான்மையோடு வெற்றி பெற்றது. அங்கு, தருமர் என்பவர் தலைவராக இருக்கிறார். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, தமிழ்நாட்டுக்கே ராஜகண்ணப்பன் மந்திரி ஆகிவிட்டாலும், உள்ளூரில் ஒன்றியத் தலைவரான அதிமுகவின் தருமரை எதிர்த்து அரசியல் செய்ய முடியவில்லை.

முதுகுளத்தூர் ஒன்றியத்தில், அமைச்சரான ராஜகண்ணப்பன் சொல்வதைவிட, தருமரின் பேச்சுக்குத்தான் மவுசு அதிகம். இதனால் டென்ஷன் ஆன ராஜகண்ணப்பன், நான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்று ஒன்றிய அதிகாரிகளுக்கும் அரசு அலுவலர்களுக்கும் வாய்மொழி உத்தரவு போட்டுள்ளார்.

 

ஆனால், முதுகுளத்தூர் ரெகுலர் பிடிஓ ராஜேந்திரன், வளர்ச்சி பிடிஓ அன்புக்கண்ணன் உள்ளிட்ட யாருமே, இதை கண்டுகொள்ளவில்லையாம். இருவருமே, அதிமுக சேர்மன் தருமரின் கண் அசைவின்படி செயல்பட்டு வருவதால் கடுப்பான கண்ணப்பன், நேரில் அழைத்து டோஸ் விட்டுள்ளார். அங்கே தனக்கு கிடைத்த அனுபவத்தைதான் ராஜேந்திரன் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

 

வன்கொடுமை சட்டம் பாயுமா?

 

வன்கொடுமை சட்டப்படி, சாதிப் பெயர் சொல்லி திட்டியதாக பட்டியலினத்தவர் புகார் செய்தால் அதற்கு சாட்சியாக பட்டியலினத்தவர் அல்லாத ஒருவர் சாட்சி சொல்ல வேண்டும். அதன்படி பார்த்தால் ராஜேந்திரனோடு அமைச்சரை பார்க்கச் சென்ற முதுகுளத்தூர் வளர்ச்சி பிடிஒ வான அன்பு கண்ணன்தான், இதில் சாட்சி சொல்ல வேண்டும். எனவே, அவரை அன்பு கண்ணனை அமைச்சரின் ஆதரவாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.

 

இதனிடையே, முதுகுளத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், பிடிஓ ராஜேந்திரனை அவமதித்ததாக கூறி அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிராக அலுவலக வாயிலில் போராட்டம் நடத்த, விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இதுதவிர, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இந்த விஷயத்தை கையில் எடுக்க, வேறுவழியின்றி ராஜகண்ணப்பன் இலாகாவை மாற்றி, ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார்.

 

திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் நடந்துள்ள சிறிய அமைச்சரவை மாற்றம்; ஆனால், அரசுக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டதால் எடுக்கப்படுள்ளது. இதன் மூலம், அமைச்சரவையில் யார் தவறோ, சர்ச்சைக்கு காரணமாகவோ இருந்தால், நடவடிக்கை உறுதி என்று, ஸ்டாலின் மறைமுகமாக உணர்த்தி இருக்கிறார். இன்னும் ஒருசில அமைச்சர்கள் மீது அதிருப்தியில் இருக்கும் ஸ்டாலின், அனைத்து அமைச்சர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளாராம். இதனால், எந்த நேரத்தில் எது நடக்குமோ என்ற கிலியில், அமைச்சர்கள் உள்ளனர்.

 

கண்ணப்பனும் சர்ச்சைகளும்!

 

கடந்த தீபாவளி பண்டிகையை ஒட்டி போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஸ்வீட் கொள்முதல் செய்வதில் டெண்டர் முறைகேடு நடந்துள்ளதாக, முதன்முதலில் சர்ச்சை வெடித்தது. இதை எதிர்க்கட்சிகள் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள, இனி எந்த துறைக்கு இனிப்பு வாங்கினாலும், ஆவின் நிறுவனத்தில் இருந்தே வாங்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு போட்டார்.

 

அடுத்ததாக, ராஜ கண்ணப்பனின் போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கு உட்பட்ட போக்குவரத்து துறை துணை ஆணையர் நடராஜனின் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி, பணத்தை கட்டுகட்டாக அள்ளினர். இந்த பணத்தில் ராஜகண்ணப்பனுக்கும் பங்கு செல்வதாக கூறப்பட்டது. இது ஸ்டாலினுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

 

கடைசியாக இப்போது, முதுகுளத்தூர் பிடிஓ ராஜேந்திரனை சாதிப்பெயர் சொல்லி திட்டிய சர்ச்சையில் சிக்கி, கடும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார்.


ராஜ கண்ணப்பன் என்ன புனிதரா?

ராஜகண்ணப்பன் விவகாரம், தமிழக எதிர்க்கட்சிகளுக்கு தீனியாகிவிட்டது. சாதிப் பெயர் சொல்லி திட்டிய ராஜகண்ணப்பனை அமைச்சரவையில் இருந்து நீக்காமல், இலாகா மாற்றம் என்பது அவருக்கு அளிக்கப்பட்ட பரிசா என்று அதிமுக கேள்வி எழுப்பி உள்ளது.

 

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அமைச்சர் ராஜகண்ணப்பனை துறை மாற்றம் செய்துவிட்டால் அவர் புனிதராகிவிடுவார் என்று முதலமைச்சர் நினைக்கிறாரா? ‘எந்த அமைச்சர் தவறு செய்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பேன்’ என்று ஆட்சிக்கு வந்தபோது அவர் கூறியது இதைத்தானா?” என்று கிடுக்கிப்பிடி போட்டுள்ளார்.

 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் தன் பங்கிற்கு திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், சாதி ரீதியாக திட்டியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டு ராஜ கண்ணப்பன், இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சாமானிய மக்களுக்கும் இதே சட்டம் பொருந்துமா? வழக்குப் பதிவு செய்யாமல் துறை மாற்றுதல் எந்த மாதிரியான முடிவு? அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


 

Right Menu Icon