7.5 சதவீத இட ஒதுக்கீடு : தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்த வழக்குகளின் தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் முந்தைய அதிமுக அரசில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்தும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீட்டை வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில், இந்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.விசாரணையின் போது, பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளதா என விளக்கமளிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய தலைமை நீதிபதி, அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தியிருந்தால், நீட் பயிற்சி மையங்கள் அமைக்கும் தேவை இருந்திருக்காது எனக் குறிப்பிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




