கர்நாடகா மாணவர் நவீன் பரிதாபமாக உயிரிழப்பு..!
உக்ரேனில் கார்கிவ்வில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் இந்திய மாணவர் நவீன் பரிதாபமாக உயிரிழந்தார். அத்தியாவசிய பொருட்கள் வாங்க இன்று காலை தங்கியிருந்த இடத்திலிருந்து வெளியே வந்தபோது வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி உயிரிழந்து விட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்தது.
அவர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொண்ட வெளியுறவுத்துறை அதிகாரிகள் தங்கள் இரங்கலை பதிவு செய்தனர். மேலும் உக்கிரமாக போர் நடைபெற்று வருவதால் உடனடியாக மாணவரின் உடலை இந்தியா கொண்டு வர இயலாது என்றும், உடலை பத்திரப்படுத்தி பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் உக்ரைன் மற்றும் ரஷ்யா அதிபர்களை தொடர்பு கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்திய மாணவர்களை பாதுகாப்பாக மீட்க உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். போர் நடக்கும் பகுதியில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக உக்ரைனின் மேற்கு பகுதிக்கு அழைத்து வர ஒத்துழைப்பு வழங்கவும் வலியுறுத்தியுள்ளது.







