முதல்வரிடம் வாழ்த்து பெற்ற பவானி தேவி..!
அர்ஜுனா விருதைப் பெறுவதற்கு தமிழக அரசு மிகவும் உறுதுணையாக இருந்ததாக வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி தெரிவித்துள்ளார். சென்னையை சேர்ந்த பவானிதேவி டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிலிருந்து வாள் வீச்சுப்போட்டியில் முதல் நபராக பங்கேற்று அசத்தினார்.
அவருக்கு மத்திய அரசு வழங்கிய அர்ஜுனா விருதை நேற்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பவானிதேவி அர்ஜுனா விருதைப் பெற்றதாக தெரிவித்தார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் இந்த ஆண்டு தான் அர்ஜுனா விருது பெற்றுள்ளேன் என்றும் இந்த விருதைப் பெறுவதற்கு தமிழக அரசு மிகவும் உறுதுணையாக இருந்தது எனவும் கூறினார். அர்ஜுனா விருது பெற்றது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக கூறினார்.






