தென்மேற்கு பருவமழை ஜூன் மூன்றாம் தேதி தொடங்க வாய்ப்பு..!
கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் மூன்றாம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்கூட்டியே பருவமழை தொடங்கும் என கூறப்பட்டு வந்த நிலையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிக மழைப்பொழிவை கொண்ட தென்மேற்கு பருவமழை ஜூன் 3 தேதி கேரளாவில் தொடங்கி செப்டம்பர் வரை பெய்யும். இந்த பருவமழை இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கும் என கணிக்கப்பட்டது.
ஆனால் முன்கூட்டியே மழை தொடங்க வாய்ப்பு இல்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது கூறியுள்ளது. தென்மேற்கு பருவக்காற்று ஜூன் 3 ஆம் தேதி வலுவடையும் என எதிர்பார்க்கப்படுவதால் மூன்றாம் தேதி பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பெய்யும் மழை அளவில் 70% தென்மேற்கு பருவமழை ஆகும்.
தென்மேற்கு பருவமழையின் போது கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் மழை பெய்யும். தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நெல்லை, தென்காசி, தேனி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்யும்.




