--- --:--:-- --

மருத்துவப்படிப்புக்கு ‘சீட்’ தேர்வு… ம.நீ.ம. தேர்தல் அறிக்கையில் உறுதி

Kamal 03

தமிழக பாடத்திட்டத்தில் இருந்து மருத்துவ படிப்புகளுக்கு ‘சீட்’ தேர்வு நடத்தப்படும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்களை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிடுகிறார். முன்னதாக, தேர்தல் அறிக்கையை சிறப்பம்சங்களைத் தன் ட்விட்டர் பக்கத்தில் கமல் பகிர்ந்திருந்தார்.

 

அ்தில், “மண், மொழி, மக்கள் காக்கும் மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் கொள்கைப் பிரகடனம் இது. தலைநிமிரப் போகும் நம் தலைமுறைகளுக்கான விதை” எனப் பதிவிட்டுள்ளார். அத்துடன் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கொள்கை பிரகடனம், மக்களாட்சி, அறிவார்ந்த அரசியல், சமூக நீதி, அரசியல் நீதி, பொருளாதார நீதி என்ற 5 தலைப்புகளின்கீழ் தேர்தல் அறிக்கையின் அம்சங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

 

தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சங்களாவன:

 

1.ஊழலற்ற, நேர்மையான, விரைந்து செயல்படும் மக்கள் நலம் காக்கும் – மக்களாட்சி.

 

2. விவசாயம் தொழில், உற்பத்தி மற்றும் சேவைத்துறை வளர்ச்சியை உயர்த்தி தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை அடுத்த 10 ஆண்டில் 15-20% வளர்ச்சியை உறுதி செய்து $1 ட்ரில்லியன் (ரூ.60-70 லட்சம் கோடியாக) ஆக உயர்த்துவோம். தனிநபர் வருமானத்தை 7-10 லட்சமாக உயர்த்தி மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும்.

 

3. 1-2 கோடி பேருக்கு மதிப்பு கூட்டப்பட்ட வேலைவாய்ப்பை உறுதி செய்து, தனிநபர் வருமானத்தை 7-10 லட்சமாக உயர்த்தி மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்.

 

4. நதி நீர் இணைப்பு, அதிதிறன் நீர்வழிச்சாலை, நீர்நிலை மேம்பாடு, தண்ணீர் மேலாண்மை அனைவருக்கும் குடிநீர் – நீலப்புரட்சி.

 

5. விவசாயம் – இயற்கையும் அறிவியலும் சார்ந்த நிரந்தரப் பசுமைப் புரட்சி, விவசாய பொருள்கள் விலை நிர்ணய உரிமை, உற்பத்தி முதல் – ஏற்றுமதி வரை உலக சந்தைமயமாக்கல். காடுவனம் அடர்த்தியாக வளர்ப்பு.

 

6. மீனவர்களுக்கு வாழ்வாதார மேம்பாடு உறுதி, ஆழ்கடல் மீன்பிடிப்பு பொருளாதார வளர்ச்சி.

 

7. கிராமப்புற சுயசார்புக்கும் தொழிலுக்கும் விவசாயத்திற்கும் மதிப்புகூட்டுதல், ஏற்றுமதிக்கும் வாழ்வாதாரத்திற்கும் மற்றும் மறுமலர்ச்சிக்கும் ஸ்மார்ட் வில்லேஜ் உருவாக்கத்திற்கும் – அப்துல்கலாம் புரா திட்டம்.

 

8. அரசு பள்ளிக்கல்வி உலகத் தரத்தில் மேம்பாடு, அடிப்படை கல்வி சீர்திருத்தம், பயிற்றுவிக்கும் முறை, பாடத்திட்டம் மாற்றம், மேல்நிலைக்கல்வி 9-10 வரை சீர்திருத்தம், மாணவர்கள் படிப்பு சுமை குறைப்பு.

 

9. 1.3 கோடி பேருக்கு உலகத் தரம் வாய்ந்த தனித்திறன் மேம்பாடு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட வேலைவாய்ப்பு.

 

10. உயர்கல்வி உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி கல்வியாக மாற்றம், உலகத்தோடு போட்டி போடும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு முக்கியத்துவம்.

 

11. தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழ்நாட்டு பாடத்திட்டத்தில் எம்பிபிஎஸ் படிப்புக்கு SEET, அனைவருக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவம், மருத்துவ வசதி, தரமான அரசு மருத்துவக் கல்வி, உயர் கல்வியில் சமூக நீதி நிலைநாட்டப்படும்.

 

12. UNO – Unorgansised to organised அனைத்து தொழிலாளர் நலவாரியங்கள், நல மேம்பாட்டு வாரியங்களாக மாற்றியமைத்து அவர்களுக்கு சமூக பொருளாதார அரசியல் மேம்பாடு உறுதி செய்யப்படும்.

 

13. சுற்றுப்புறச் சூழலுக்கேற்ற தொழில்துறை மேம்பாடு, மாசுபடுத்தும் 185 ஆலைகள் முற்றிலும் மாசில்லா ஆலைகளாக மாற்ற உறுதி செய்யப்படும்.

 

14. நஷ்டத்தில் இயங்கும் அனைத்து அரசு நிறுவனங்களும் லாபத்தில் இயங்க அறிவார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

 

15. கிராமப்புற நகர்ப்புற கட்டமைப்பு, தொழிற்சாலை எரிசக்தி, விவசாய சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலை கட்டமைப்பு உலகத் தரத்தில் மேம்பாடு.

 

16. தமிழ் மொழி, கல்வி மொழி, ஆட்சி மொழி, ஆராய்ச்சி மொழி, ஒரு வருடத்தில் ஆங்கில மொழிப் புலமை, மற்ற மொழி பயில, தேர்வு எழுத வசதி வாய்ப்பு.

 

17. சாதி, மத வேறுபாடில்லா மக்களாட்சி அமைப்போம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, மதத்தின் பெயரால் குடியுரிமை முற்றிலும் எதிர்ப்போம். ஈழத்தமிழ் அகதிகளாக வந்தோருக்கு குடியுரிமை வலியுறுத்துவோம்.

 

18. மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் அரசியல் மற்றும் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி நனவாக்கும் கூட்டணி அரசை மத்தியில் உருவாக்குவோம். தமிழ்நாட்டை வளர்ந்த நாடுகளுக்கு இணையான நாடாக்குவோம்”.

 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon