கமலுடன் சேரலாமா? ஆழ்ந்த யோசனையில் தேமுதிக! அதிமுக மீது அதிருப்தி!!
அதிமுக கூட்டணியில் 13 சீட்டுக்கு மேல் கிடையாது என்று திட்டவட்டமாக கூறப்படுவதால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக, தேமுதிக மாவட்ட செயலாளர்களின் அவசர ஆலோசனைகூட்டம் இன்று சென்னையில் தொடங்கியுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் 6ம் தேதி நடக்கிறது. வேட்புமனு தாக்கல், வரும் 12ல் தொடங்கி 19ம் தேதி நிறைவு பெறுகிறது. ஆளும் அதிமுக கூட்டணி மற்றும் திமுக அணியில் தொகுதி பங்கீடு ஏறக்குறைய இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. திமுக அணியில் கொமதேகவுடன் பேச்சு வார்த்தை இன்னும் இழுபறியாகவே உள்ளது.
அதிமுக கூட்டணியில் தேமுதிக, தமாகாவுடன் இன்னும் தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை. இதில் தமாகாவுடன் அதிமுகவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை; இன்று அல்லது நாளைக்குள் அக்கட்சியுடன் உடன்பாடு எட்டப்படும் என்று தெரிகிறது. ஆனால், தேமுதிகவுடன் தான் பிரச்சனை நீடித்து வருகிறது. காரணம், ஆரம்பத்தில் தேமுதிக 45 சீட்டுகள் வேண்டும் என்றது. பின்னர் படிப்படியாக இறங்கி வந்து தற்போது 23 சீட்டுகளுடன் ஒரு ராஜ்யசபா எம்.பி. சீட் கொடுத்தால் போதும் என்ற நிலையில் தேமுதிக உள்ளது.
அதேநேரம், தேமுதிகவுக்கு 10 இடங்கள் என்று தொடங்கி 13 இடங்கள், ஒரு ராஜ்யசபா சீட் என்று அதிமுக கூறிவருகிறது. தேமுதிகவுக்கு முன்பு போல் இப்போது செல்வாக்கு இல்லை என்பதால், இதற்கு மேல் ஒதுக்க முடியாது; வேண்டுமானால் தொடரட்டும் அல்லது கூட்டணியில் இிருந்து விலகி கொள்ளலாம் என்று அதிமுக திட்டவட்டமாக கூறிவிட்டதாக தெரிகிறது. இதனால் தேமுதிக அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளது. கடைசி நேரத்தில் அதிமுக இவ்வாறு கறாராக இருப்பதால் மாற்று வழியை தேடவும் கூட தேமுதிகவுக்கு நேரமில்லை.
கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எதிர்கட்சித் தலைவராக விஜயகாந்த் உருவெடுத்தார். விஜயகாந்தின் வருகையால் திமுகவே கொஞ்சம் ஆடிப்போனது. ஆனால், விஜயகாந்த் உடல்நிலை பாதிப்பால் முழு நேர அரசியலில் ஈடுபடாமல் போனது; அதன் பின்னர், தேமுதிகவின் செல்வாக்கு சரியத் தொடங்கியது. இதன்காரணமாக கூட்டணிக் கட்சிகள் உதாசீனம் செய்யும் பரிதாப நிலைக்கு தேமுதிக தள்ளப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இம்முறை சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவின் நிலை மிக மோசமாக உள்ளது.
இந்த சூழலில் தான், தேமுதிக மாவட்டச் செயலாளர்களின் அவசரக் கூட்டம், சென்னை கோயம்பேடு தலைமையகத்தில் இன்று காலை தொடங்கியுள்ளது. 76 மாவட்ட செயலாளர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இன்றைய கூட்டத்தில் பொருளாளர் பிரேமலதா, எல்.கே. சுதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதில் அதிமுக தரும் தொகுதிகளை பெற்றுக் கொள்வதா அல்லது அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று ஆலோசிக்கப்படுகிறது. கமல் தலைமையிலான 3வது அணியில் இணைந்து தேர்தலை சந்திக்கும் வாய்ப்புகள் குறித்தும் இக்கூட்டத்தில் பரிசிலீக்கப்படும் என்று தெரிகிறது. ஆனால், பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள், அதிமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என்று கூறுவதாகவும், எனவே அதிமுகவுடன் கூட்டணியை தேமுதிக தொடரவே வாய்ப்புகள் அதிகம் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




