விருப்ப மனு: மார்ச் 4 முதல் அதிமுக நேர்காணல்! காங்கிரஸ் கட்சியும்‘சுறுசுறுப்பு’!
அ.தி.மு.க.வில் விருப்பமனு அளித்தவர்களிடம் மார்ச் 4ம் தேதி முதல் நேர்காணல் நடைபெற உள்ளது; மார்ச் 6,7 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக, ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. வேட்புமனு தாக்கல், வரும் 12ம் தேதி தொடங்கி, 19ஆம் தேதி நிறைவு பெறுகிறது.
இந்நிலையில் அதிமுக சார்பில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம், மார்ச் 4ம் ஆம் தேதி முதல் நேர்காணல் நடைபெறும் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடத்தப்படும். மார்ச் 4ம் தேதி காலை 9 மணி முதல் மாவட்ட வாரியாக நேர்காணலில் பங்கேற்க வேண்டுமென்று, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளனர்.
இதேபோல், மார்ச் 6,7 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நேர்காணல் நடைபெற உள்ளதாக, அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, கே.எஸ். அழகிரி தனது டிவிட்டர் பதிவில், ‘2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் & கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியில் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியினரிடம் இருந்து, பிப்ரவரி 25 முதல் மார்ச் 5-ம் தேதி வரை சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த அனைவரிடமும் மார்ச் 6 மற்றும் 7 -ம் தேதிகளில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நேர்காணல் நடைபெறவுள்ளது’ என்று கூறியுள்ளார்.





