விவசாயிகள் நலன் காக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது..!
விவசாயிகள் நலன் காக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிக்கி எனப்படும் இந்திய தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் காணொளி முறையில் பிரதமர் பேசியுள்ளார்.
விவசாயிகள் வருவாயை அதிகரிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் தங்கள் விளை பொருட்களுக்கு எங்கு நல்ல விலை கிடைக்கிறதோ அங்கு பெற்றுக்கொள்ளலாம் எனவும் பிரதமர் விளக்கினார். தொழில்துறையினர் விவசாயத்துறையில் முதலீடுகளை அதிகரிக்க முன்வரவேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
குளிர்பதனக் கிடங்குகள், உற்பத்தி போன்றவற்றில் தனியார் துறையின் பங்களிப்பு போதுமான அளவு இல்லை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். 2020ஆம் ஆண்டு இந்தியா பாதிப்புகளை சந்தித்தது எனக் கூறிய பிரதமர் தற்போது அதிலிருந்து வேகமாக மீண்டு வருவதாக குறிப்பிட்டார்.
அன்னிய முதலீடுகளை அதிகரிப்பது உள்ளிட்ட பொருளாதார புள்ளி விவரங்கள் நம்பிக்கை தரும் வகையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.






