“அப்பாவின் சிகிச்சை கட்டணம் தொடர்பாக தயவுசெய்து வதந்தி பரப்பாதீர்”!! எஸ்.பி.பி. மகன் சரண் உருக்கமான வேண்டுகோள்!!
மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபியின் மருத்துவ சிகிச்சைக்கான கட்டணம் குறித்து சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் சர்ச்சை தொடர்பாக அவரது மகன் எஸ்பிபி சரண் வீடியோ வெளியிட்டு நீண்ட விளக்கம் அளித்துள்ளார். அதில் தயவு செய்து யாரும் வதந்தி பரப்ப வேண்டாம். உண்மை நிலவரம் குறித்து விரிவான அறிக்கை வெளிவரும் எனவும் சரண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக தனது குரல் வளத்தால் இசை ரசிகர்களை மகிழ்வித்த பிரபலமான பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த 25-ந் தேதி மறைந்தார். அவரது மறைவுக்கு நாடே கண்ணீர் வடித்தது எனலாம். குடியரசுத் தலைவர், பிரதமர் முதல் அனைத்து மாநில முதல்வர்கள், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் , திரையுலக பிரபலங்கள் என் அத்துணை பேரும் இரங்கல் தெரிவித்தனர். எஸ்.பி.பி.யின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அவரது உடல் அரசு மரியாதையுடன் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் எஸ்பிபியின் சிகிச்சைக்கு அவர் சிகிச்சை பெற்ற எம்.ஜி.எம் மருத்துவமனை தரப்பில் அதிகப்படியான பில் போடப்பட்டதாகவும், இதனைக் கட்டுவதற்கு எஸ்பிபி குடும்பத்தினரால் முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் உலா வருகிறது. உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்க ம்ருத்துவமனை நிர்வாகம் மறுத்த நிலையில், குடியரசு துணைத் தலைவரை எஸ்.பி.பி. மகன் சரண் அணுகிய பிறகே, மருத்துவமனை நிர்வாகம் எஸ்பிபியின் உடலைக் கொடுத்தது என்றும் செய்தி பரப்பப்பட்டது பெரும் சர்ச்சையானது.
இந்த சர்ச்சை தொடர்பாக எஸ்பிபி மகன் சரண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அப்பா கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். மொத்தமாக எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பது குறித்து வதந்தி ஒன்று வந்திருக்கிறது.
நாங்கள் ஏதோ பணம் கட்டியதாகவும், ஆனால் இன்னும் பணம் பாக்கி இருந்ததாகவும், பின்னர் தமிழக அரசிடம் அதற்காகக் கோரியதாகவும், அவர்கள் மறுத்ததால் குடியரசுத் துணைத் தலைவரிடம் நான் கோரிக்கை வைத்ததாகவும் ஒரு செய்தி உலவுகிறது. மேலும் நாங்கள் பாக்கி பணத்தை தரும் வரை அப்பாவின் உடலை எம்ஜிஎம் மருத்துவமனை ஒப்படைக்கவில்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சுத்த அபத்தங்கள். முற்றிலும் பொய்யான தகவல்.
இதுபோன்ற வதந்திகளைத் தெளிவுபடுத்த நானும், மருத்துவமனைத் தரப்பும் சேர்ந்து ஒரு செய்தி அறிக்கையைத் தரப்போகிறோம். இப்படி ஒரு விஷயத்தை நாங்கள் செய்ய வேண்டியுள்ளது என்பதே வருத்தத்தைத் தருகிறது. எம்ஜிஎம் ஹெல்த்கேர் செய்த அத்தனை சிகிச்சைகளுக்கும், எங்கள் குடும்பத்துக்குச் செய்த உதவிகளுக்கும் எங்கள் குடும்பம் என்றும் நன்றியுடன் இருப்போம். மருத்துவமனைக் கட்டணங்கள் தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியாகும்.
ஆனால், அதுவரை தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீர்கள். நீங்கள் எவ்வளவு பேரைக் காயப்படுத்துகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியவில்லை என எஸ்.பி.பி. சரண் வீடியோ பதிவில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.






