--- --:--:-- --

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் : தளர்வுகளை அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

2.2

முக்கியப் பணிகளுக்காக, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயணிக்க ஏதுவாக, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லக் கூட இ-பாஸ் அவசியம் என தெரிவிக்கப்பட்டிருந்தது திருமணம், மருத்துவம், இறப்பு காரணங்களுக்காக மட்டுமே இ-பாஸ் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதில் பல்வேறு குளறுபடிகள் தொடர்ந்தன.

 

உண்மையான காரணம் கூறி விண்ணப்பித்தாலும் இ-பாஸ் கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது. லஞ்சம் பெற்றுக் கொண்டு இ-பாஸ் வழங்குவது, போலி இ-பாஸ் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் இ-பாஸ் நடைமுறையையே ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்தது.

 

இதையடுத்து இந்த இ-பாஸ் நடைமுறையில் பெரும் தளர்வுகளை அறிவித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று அறிவித்துள்ளார். அதன்படி விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும்
தவிர்க்க இயலாத பயணங்களுக்கு ,மட்டுமே விண்ணப்பிக்குமாறும் தமிழக முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசு கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், சிகிச்சைகளை அளித்தும், நிவாரணங்களை வழங்கியும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

 

நோய்த் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொது மக்களின் ஒத்துழைப்பையும், நோய்த் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு, ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது.

 

நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க, திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம், பணி சம்பந்தமாக பயணித்தல், வெளியிடங்களுக்குச் சென்று சொந்த ஊர் திரும்புதல் ஆகிய காரணங்களுக்காக மட்டும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க விண்ணப்பிக்கப்படும் இ-பாஸ் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

 

இதன் மூலம் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் கண்காணிக்கப்பட்டு, நோய்த் தொற்று ஏற்பட்டால் அவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறியது தனிமைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 

இந்நிலையில், பொதுமக்கள் முக்கியப் பணிகளுக்கு தடையின்றி தமிழ்நாடு முழுவதும் பயணிக்க (மாவட்டங்களுக்கு இடையே) 17.8.2020 முதல் ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன் தொலைபேசி அல்லது அலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால், இ-பாஸ் அனுமதி எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனுக்குடன், விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

 

பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை, அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்தி தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் இ-பாஸுக்கு விண்ணப்பம் செய்து, இ-பாஸ் பெற்று பயணிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த அரசின் நிலையான வழிகாட்டி நடைமுறைகளை கடைப்பிடிக்கவும், அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் பொதுமக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon