நெல்லையில் நோயாளிகளுக்கு தொல்லை! ‘உயிரை பணயம் வைத்து பணம் பறிக்கிறதா ஷிபா?’ கொரொனா தொற்றால் கொழிக்கும் “வசூல் ராஜா”
திருநெல்வேலியில் தனியார் மருத்துவமனை ஒன்று, கொரோனா நோய் பரவலை சாதமாக பயன்படுத்தி, நோயாளிகளிடம் பணத்தை ‘கறப்பதாக’ குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊருக்கு செய்தியை சொல்லும் நிருபருக்கே ‘அல்வா’ தந்த அந்த மருத்துவமனையை அரசு கண்காணித்து, தவறு உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை வலுத்து வருகிறது.
திருநெல்வேலிக்கு புகழ் சேர்ப்பது ‘அல்வா’; ஆனால், இப்போது அங்குள்ள சில தனியார் மருத்துவமனைகள் செய்து வரும் மோசடிகளும், நெல்லையின் பெயரை கெடுப்பதாக உள்ளது. நோயாளிகளுக்கு பெரும் தொல்லையை தருவதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பது, நெல்லை ஜங்க்சன் பகுதியில் உள்ள பாரம்பரியம் மிக்க ஷிபா மருத்துவமனைதான்.
கடந்த 1971ம் ஆண்டு சேவை நோக்கில் இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டது. திருநெல்வேலி சிந்துபூந்துறை தரும ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தை, வாடகை அடிப்படையில் முஸ்லிம் சகோதரர்கள் இருவர் குத்தகைக்கு எடுத்து கட்டிடங்கள் கட்டி மருத்துவமனையை உருவாக்கினார்கள். இங்கு எலும்பு முறிவு சிகிச்சை மிகவும் பிரசித்தம். சிறந்த சேவை, விரைவில் குணமடையச் செய்யும் கைராசி என்று, இந்த மருத்துமனையின் புகழ் நாலாப்புறமும் பரவ, பலரும் சிகிச்சைக்கு வரத் தொடங்கினார். இதன் நிர்வாகம் தற்போது, எம்.கே.எம்.முஹம்மது ஷாபி மற்றும் முகம்மது அராபத் ஆகியோர் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஆரம்பத்தில் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்ட இந்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு, நாளாடைவில் காசு பார்க்கும் எண்ணம் வந்துவிட்டதாக, அந்த மருத்துவமனைக்கு பல ஆண்டுகளாக சிகிச்சைக்கு சென்று வரும் நோயாளிகளில் சிலர் வேதனையோடு நம்மிடம் கூறினர். சமுதாயத்தில் பெரிய அந்தஸ்தில் இருக்கும் பலருடன் நட்பை வளர்த்து கொள்வது, மக்கள் பிரதிநிதிகளை கைக்குள் போட்டுக் கொண்டு், தங்களது தவறுகளை மருத்துவமனை நிர்வாகம் மறைத்து வருவதாகவும், அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சுகாதார விழிப்புணர்வு பேரணி, இலவச மருத்துவ முகாம், குழந்தை பேறு ஆலோசனை என்ற மாதந்தோறும் ஏதேனும் நிகழ்ச்சியை ஷிபா மருத்துவமனை நடத்துவது வழக்கம். இதற்கு அமைச்சர், கலெக்டர், எஸ்.பி. போலீஸ் கமிஷனர், எம்.எல்,ஏ.க்கள் என்று பலரையும் அழைத்து ஆடம்பரமாக விழா நடத்துவார்கள். அந்த முகாமின்போது வசதியான நோயாளிகளை குறிவைத்து தேர்வு செய்து, அவர்களை மருத்துவமனையின் ரெகுலர் வாடிக்கையாளராக மாற்றும் உத்தியை, நிர்வாகம் கையாண்டு வருவதாகவும், அவர்களுக்கு பல்வேறு மருத்துவ ஆலோசனைகளை சொல்லி குழப்பிவிட்டு, உயர்சிகிச்சை பிரிவில் சேர்த்து பெரும்தொகை ‘கறப்பது’ வாடிக்கையாகிவிட்டதாக, ஷிபா மருத்துவமனை மீது புகார்கள் எழுந்தன.
குறிப்பாக வயதான, வசதியானவர்களை தீவிர நோயுள்ளதுபோல் காட்டி, மருத்துவமனையில் அனுமதிக்கச் செய்வது, ‘ரமணா’ திரைப்பட பாணியில் செயற்கை சுவாசம், உயர்ரக மருந்துகள், அதிநவீன கருவிகள் மூலம் சோதனை என்றெல்லாம் காட்டி, முடிந்தளவு பணத்தை பறித்து விட்டு, கடைசியில் ‘எவ்வளவோ முயன்றும் முடியவில்லை’ என்று சினிமா டயலாக்கை உதிர்த்துவிட்டு நழுவிவிடுவார்களாம்.

இந்த சூழ்நிலையில் தான், கொடிய கொரோனா தொற்று பரவி, பாடாய் படுத்த ஆரம்பித்தது. விடுவார்களா, இவர்கள்? கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் அனுமதியை அரசிடம் இருந்து இந்த மருத்துவமனை பெற்றது. கொரோனா சிகிச்சை தொடர்பாக அரசு விதித்த வழிமுறைகள், கட்டண விகிதங்களை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு, எந்தவிதமான நோய் அறிகுறியுடன் யார் சிகிச்சைக்கு வந்தாலும், கொரோனா பரிசோதனையை நடத்தி, தனிமைப்படுத்தும் வார்டுக்கு அனுப்பி வைத்துவிடுவார்களாம்.
பின்னர், அவசர சிகிச்சை தேவையென்று சொல்லி, வென்டிலேட்டர் பொருத்தி, அதற்கு நாளொன்றுக்கு சுமார் ரூ. 5,000 முதல் ரூ.30,000 வரை, படுக்கை வசதிக்கு மட்டும் வசூலிக்கப்படுகிறதாம். அத்துடன் பரிசோதனை, சிறப்பு மருத்துவர்கள் கட்டணம், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பணியாட்கள் பில்கள் என்று தனியாக பெருந்தொகையுடன் இன்னொரு பில் வருமாம்.
கொரோனா இல்லை என்றால் ரெகுலர் ஐசியூ வார்டிற்கு மாற்றி வைத்து, நோயாளிக்கு ஏதாவது இருப்பதாகச் சொல்லி, முடிந்த அளவிற்கு பணம் பறிக்கும் வேலை நடக்கும் என்று, சிகிச்சையை அனுபவித்து வந்த சிலர், கண்ணீர் மல்க குறிப்பிட்டனர். இந்த மருத்துமனை நிர்வாகிகளுடன் கலெக்டர், வருவாய் அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள் என பலரும் நெருக்கமாக இருப்பதால் இதுபற்றி புகார் அளிக்க, பலரும் தயங்குகின்றனர்.
அப்படியே எவரேனும் ஷிபா மருத்துவமனைக்கு எதிராக புகார் அளித்தால், காலம்காலமாக அவர்களிடம் ‘மாமூல்’ வாங்கி வரும் அதிகாரிகள், புகாரை உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தாமல் மறைத்துவிடுவதாக பேசிக்கொள்கிறார்கள்.

பாளையங்கோட்டை அரசு கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் பலர், இந்த மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள்காக உள்ளனர். அவர்களில் சிலர், கொரோனா போன்ற கொடிய தொற்று பரவி வரும் சூழலில் அரசு மருத்துவமனையில் கடமையாற்றாமல், இங்கு வந்து தங்களது வருமானத்தை பெருக்கிக் கொள்கிறார்கள்.
மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த பண வேட்டையில், சமூகத்திற்கு செய்திகளை வழங்கி வரும் ஊடக நிருபர் ஒருவரும் சிக்கிக் கொண்டதுதான் பெரும் சோகம். சுவாசம் மற்றும் தைராய்டு பிரச்சினைக்காக, தனது தாயை இந்த மருத்துவமனைக்கு, நிருபர் அழைத்து வந்துள்ளார். அவ்வளவுதான், 10 நாட்கள் சிகிச்சை என்ற பெயரில் அலைக்கழித்துள்ளனர். இறுதியில், சிகிச்சைக்கான கட்டணம் ஏறத்தாழ ரூ.3 லட்சம் என்று பில் வந்ததும், அந்த நிருபருக்கு மயக்கம் வராத குறைதான்.
தனது நட்பு வட்டாரத்தில் உள்ள சில அதிகாரிகள், வேறு சிலர் அந்த நிருபருக்காக மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசிப்பார்த்தும், பலனில்லை. பணத்தை வசூலிப்பதில் குறியாக இருந்ததோடு, மேலும் சுமார் ஒரு லட்சம் மதிப்பிற்கு சில உபகரணங்கள் வாங்க கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். வெளிச்சந்தையில் அவற்றின் மொத்த மதிப்பே வெறும் 8 ஆயிரம் ரூபாய் தானாம்.

ஷிபா மருத்துவமனையின் அனைத்து பிரிவுகளுக்கும் பொறுப்பு மருத்துவராக இருப்பவர், அருண் குமார் என்ற டாக்டர். இவர், சிகிச்சையில் மட்டுமில்லை, பணத்தை சாமர்த்தியமாக கறப்பதிலும் நிபுணராம். பல்வேறு அபாயகரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறி பல ஆவணங்களில் கைரேகையுடன் கையெழுத்து வாங்கிக் கொள்வாராம். பின்னர், நன்றாக உள்ள நோயாளியை, கவலைக்கிடமாக இருப்பதுபோல் காட்டி, பல்வேறு புதிய சோதனைகள், மருந்துகள் தேவையென்று கூறி, பல லட்சம் ரூபாய் வேட்டை நடத்தப்படுமாம்.
ஒருகாலத்தில் சேவை மனப்பான்மையோடு செயல்பட்டு வந்தபோது, இந்த மருத்துவமனை நெல்லை நகருக்கு பெருமைதேடித் தரும் அடையாளமாக திகழ்ந்தது. தற்போது, அதற்கு நேர்மாறாக, சிகிச்சை என்று நாடி வரும் நெல்லை மக்களுக்கு தொல்லை தரும் அவமானச்சின்னமாகிவிட்டதாக, உள்ளூர் மக்கள் வேதனைப்படுகின்றனர். ஷிபா மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்ல வேண்டுமென்றால், ஒன்று வசதியானவர்களாக இருக்க வேண்டும்; அல்லது, முதல்வரின் மருத்துவக்காப்பீடு போன்ற ஏதேனும் காப்பீடு திட்டத்தில் இருக்க வேண்டும் என்ற நிலையே உள்ளது.
மருத்துவச்சேவை என்பது புனிதமானது; மருத்துவர்களை பொதுமக்கள் கடவுளைப்போல் கருதுகிறார்கள். ஆனால், அந்த மருத்துவத்துறைய்ல் இதுபோன்ற சிலர் உள்ளதால், ஒட்டுமொத்த துறைக்கும் பெருத்த அவப்பெயர் உண்டாகிவிடுகிறது. ஷிபா மருத்துவமனை நிர்வாகம் மீதான குற்றச்சாட்டுகளை பாரபட்சமின்றி அரசு விசாரிக்க வேண்டும்; தவறு புரிந்தது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; முறைகேட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருத்துவமனை நிர்வாகம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






