நேபாளம் வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தால் சர்ச்சை!
இந்தியாவின் இடங்களை தங்களுடைய பகுதிகளாக குறிப்பிட்டு நேபாளம் வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. நேபாள அரசு வெளியிட்டுள்ள தங்கள் நாட்டின் புதிய வரைபடத்தில் இந்திய பிராந்தியங்கள் ஆன லிபுலே, கலாபானி, லிம்பியா துறா ஆகிய இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதற்கிடையில் இந்திய பகுதிகளை தமது நிலப்பரப்பாக காட்டியுள்ள நேபாளத்தின் செயலுக்கு வெளியுறவுத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நேபாளம் வெளியிட்டுள்ள புதிய வரைபடம் வரலாற்று ரீதியாகவோ அல்லது ஆதார ரீதியாகவோ உண்மைத் தன்மை கொண்டது அல்ல என தெரிவித்துள்ள இது சேர்க்கையாக விரிவுபடுத்தப்படும் ஒரு விஷயம் என கூறியுள்ளது. இந்திய இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் நேபாளம் மதிக்க வேண்டும் என வெளியுறவுத்துறை குறிப்பிட்டுள்ளது.

நேபாள அமைச்சர் பத்மகுமாரி ஆரியால் தமது நாட்டின் புதுப்பிக்கப்பட்ட வரைபடம் ஒன்றை நேற்று வெளியிட்டார். அதில் லிபுலே, கலாபானி, லிம்பியா துறா ஆகிய இந்தியாவின் பகுதிகளும் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இந்த எல்லை பிரச்சனையை புதிதான ஒன்று அல்ல. கடந்த 60 ஆண்டுகளாக இந்த பிரச்சினை நிலவி வருகிறது.
இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் பிரதமர்கள் அளவில் பேச்சு நடந்தும் கூட இதற்கு தீர்வு காணப்படவில்லை. இந்த நிலையில் கடந்த அக்டோபரில் இந்தியா வெளியிட்ட புதிய வரைபடத்தில் லிபுலே, கலாபானி, லிம்பியா துறா போன்ற பகுதிகள் இடம்பெற்றிருந்தன. இதைத்தொடர்ந்து கைலாச மானசரோவர் யாத்திரை மேற் கொள்வதற்காக புதிய பாதை ஒன்றை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரு வாரங்களுக்கு முன் திறந்துவைத்தார்.
அதில் லிபுலே கணவாய் வரையில் இந்தியா சாலை அமைத்து இருந்தது. இதற்கு நேபாளம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதற்கு இந்தியா உடனடியாக பதில் தந்தது. நேபாளத்தை யாரோ பின்னணியில் இருந்து இயக்குகிறார்கள் என சீனாவை மறைமுகமாக சுட்டிக் காட்டியிருந்தார் இந்திய ராணுவ தளபதி. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள லிபுலே பகுதி ராணுவ ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கடல் மட்டத்தில் இருந்து 20 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளதால் கண்காணிப்பு பணிகளுக்கு இது மிகவும் உகந்ததாக பார்க்கப்படுகிறது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் கேபிஒலி அந்நாட்டின் பிரதமராக பதவி ஏற்றதில் இருந்து ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வருவதாக விமர்சனங்கள் இருந்தது. தற்போது எல்லை விவகாரத்தில் நேபாளம் தெரிவித்துள்ள எதிர்ப்பு இந்தியாவிற்கு புதிய நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்காகவா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.






