--- --:--:-- --

தமிழகம் வர வேண்டிய கொரோனா ரேபிட் டெஸ்ட் கருவிகளை அமெரிக்காவுக்கு அனுப்பி விட்டதாம் சீனா..! தலைமைச் செயலாளர் சண்முகம் பரபரப்பு தகவல்!!

images

தமிழகத்திற்கு வர வேண்டிய கொரோனா ரேபிட் டெஸ்ட் கிட் இன்னும் வந்து சேரவில்லை என்றும், அமெரிக்காவுக்கு அவசரமாக சீனா அனுப்பியதே தாமதத்திற்கு காரணம் என்றும் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை விரைவாக நடத்த, சீனாவில் இருந்து 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்களுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் கூறப்பட்டு வந்தது. இதில் முதல் கட்டமாக 1 லட்சம் கிட்கள் 10-ந் தேதி (நேற்று) வந்து விடும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமைச் செயலாளர் சண்முகம், 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் டெல்லிக்கு வந்து சேர்ந்துள்ளதாகவும், அவற்றை மத்திய அரசு மாநிலங்களுக்கு சப்ளை செய்ய உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்,

 

ஆனால், இன்று காலை வெளியான தகவல்படி,சீனாவிலிருந்து இந்தக் கருவிகள் இந்தியாவுக்கு இன்னும் வந்து சேரவேயில்லை என்பது தெரிய வந்தது. சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்ததுடன், இந்தக் கருவிகள் வராததற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று மாலை தமிழக அமைச்சரவைக் கூட்டம் முடிவடைந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைச் செயலாளர் சண்முகம், சீனாவில் இருந்து ரேபிட் டெஸ்ட் கருவிகள் இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை என்பதை தெரிவித்தார். தமிழகம் சார்பில் 4 லட்சம் ரேபிட் கருவிகளை இறக்குமதி செய்ய சீனாவிடம் ஆர்டர் செய்திருந்த நிலையில், அவசரமாக அமெரிக்காவுக்கு அவற்றை சீனா அனுப்பி விட்டதே தாமதத்திற்கு காரணம் என்றார். மேலும், தமிழகத்தில் பி சி ஆர் முறையில் கொரோனா பரிசோதனை தடையின்றி நடை பெற்று வருவதாகவும் தலைமைச் செயலாளர் சண்முகம் விளக்கமளித்தார்.

 

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் பற்றிய பட்டியலையும் தலைமைச் செயலாளர் வெளியிட்டார். அதில், இன்று மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 968 ஆக உயர்ந்துள்ளதாகவும், இன்று ஈரோட்டைச் சேர்ந்த ஒரு நபர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பும் 10 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon