--- --:--:-- --

“இதுவும் தும்பை விட்டு வாலை பிடித்த கதை தான்!!” கொரோனா தொற்றுடன் டெல்லி இளைஞரை வெளியேற்றி விட்டு தேடி அலையும் பரிதாபம்!!

6267e5af-6fcf-4597-8581-0d79d75b6345

விழுப்புரத்தில், அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் கொரோனா தொற்றுடன் வெளியேற்றப்பட்ட டெல்லி இளைஞரை போலீசார் 3-வது நாளாக வலை வீசி தேடி வருகின்றனர்.

 

விழுப்புரம் மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் 26 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர். இதில் டெல்லியை சேர்ந்த 32 வயது நிதின் சர்மா என்ற இளைஞரும் ஒருவர். இவர்களிடம் மருத்துவமனையில் நடத்திய பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று தெரிய வந்ததால் அனைவரையும் வெளியே அனுப்பி விட்டனர்.

 

ஆனால், இவர்களிடம் எடுக்கப்பட்ட ரத்த மாதிரி சோதனை முடிவுகள் வந்த போது 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது தெரிய வந்ததால், மருத்துவமனை நிர்வாகத்தினரும், சுகாதாரத் துறையினரும் பதறி விட்டனர். உடனடியாக 4 பேரையும் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் 3 பேர் விழுப்புரத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் என்பதால் எளிதில் அடையாளம் கண்டு மீண்டும் மருத்துவமனையில் சேர்த்து விட்டனர்.

 

ஆனால், மற்றொருவரான நிதின் சர்மா என்ற டெல்லி இளைஞரை கண்டுபிடிப்பது தான் போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது. அந்த இளைஞரின் புகைப்படத்தை நோட்டீஸ் அச்சடித்து முக்கிய இடங்களில் ஒட்டியும், ஊடகங்களில் வெளியிட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் 7 தனிப்படைகள் அமைத்து சல்லடை போட்டு தேடி வருகின்றனர். இப்போது லாரி போன்ற வாகனங்களில் சொந்த ஊருக்கு தப்ப முயலலாம் என்பதால் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றன்.

உண்மையில், கொரோனா அறிகுறி தமக்கு இருக்கிறது என்பதே அந்த டெல்லி இளைஞருக்கு தெரிய வாய்ப்பில்லை. மேலும் மொழிப் பிரச்னையும் வேறு உள்ளது. இதனால் அவர் மூலம் கொரோனா வைரஸ் மேலும் பலருக்கு பரவும் அபாயம் இருப்பதால் சுகாதாரத் துறையினர் அதிர்ச்சியடைந்து 3-வது நாளாக போலீசாரின் உதவியுடன் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி, புதுச்சேரியிலும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

 

இந்த கொடிய கொரோனா வைரசால் உலகமே நடு நடுங்கிப் போய் உள்ளது. இந்நிலையில் டெல்லி இளைஞரை சரிவர சோதிக்காமல், வெளியில் அனுப்பி விட்டு, இப்போது தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக தேடி வருவது விழுப்புரம் அரசு மருத்துவமனை மற்றும் சுகாதாரத் துறையினரின் அலட்சியப் போக்குதான் காரணம் என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

 

இதே போன்று தான் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழந்த கீழக்கரை முதியவர் விஷயத்திலும் அலட்சியம் நடந்தது.இறந்தவரின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்து அடக்கம் செய்த 2 நாட்களுக்குப் பின் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது எனக் கூறி, உடல் அடக்கத்தில் பங்கேற்ற 300 பேரிடம் சோதனை நடத்தியது பெரும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon