மாணவிக்கு பாலியல் தொந்தரவு- 2 ஆசிரியர்கள் கைது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அரசுப் பள்ளி மாணவிக்கு செல்போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். ஜக்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் லட்சுமணன் மற்றும் சின்னமுத்து ஆகியோர் வரலாறு ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் இருவரும் அதே பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவிக்கு செல்போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். காதல் கவிதைகள், ஆபாச வார்த்தைகள் மற்றும் ஆபாச சித்திரங்களை அனுப்பி வந்த இருவரும், பள்ளியில் மாணவியை மிரட்டி எல்லை மீற முயன்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதியினர் பள்ளி முன்பு திரண்டனர். பள்ளியில் குடிபோதையில் இருந்த ஆசிரியர்கள் இருவரையும் தாக்கியவர்கள் மகேந்திரமங்கலம் காவல்நிலையத்தில் இருவரையும் ஒப்படைத்தனர். விசாரணை மேற்கொண்ட போலீசார் இரு ஆசிரியர்களையும் கைது செய்தனர்.





