--- --:--:-- --

ஊசி உடைந்து உடலுக்குள் சென்ற ஊசி! மருத்துவர் அலட்சியத்தால் கதறி துடித்த குழந்தை

9.9

மருத்துவமனையின் அலட்சியத்தால் ஊசி முறிந்து நோயாளிகள் துன்பப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் ஜலதோஷத்திற்கு சிகிச்சைக்கு சென்ற குழந்தை செவிலியர்களின் அலட்சியத்தின் காரணமாக துடித்துக் கொண்டிருக்கிறது.

 

கடந்த 40 நாள்களுக்கு மேலாக உடலில் தங்கிய உடைந்த ஊசியுடன் அவதிப்பட்டு உள்ளது இந்த குழந்தை. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எட்டிமடை புது ஊரில் வசித்து வருபவர் ரமீலா. கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரை பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

 

ரமிளாவின் ஒன்றரை வயது மகன் சர்வேஸ்வரனுக்கு கடந்த மாதம் 15ஆம் தேதி சாதாரணமாக ஜலதோஷம் பிடித்துள்ளது. இதையடுத்து திருச்செங்கோடு உழவர் சந்தை எதிரே உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்த மருத்துவர் தாமரைக்கண்ணன் குழந்தை சர்வேஸ்வரனுக்கு ஊசி போடுமாறு பரிந்துரைத்துள்ளார்.

 

இதையடுத்து மருத்துவமனையில் பணிபுரியும் சரளா மற்றும் இந்துமதி ஆகிய செவிலியர்கள் குழந்தையின் இடது கையில் ஊசி போட்டு உள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஊசி உடைந்துள்ளது. இதுகுறித்து செவிலியர்கள் சரளாவும், இந்து மதியும் மருத்துவர் தாமரை கண்ணனிடம் கூறியுள்ளனர்.

 

அப்போது ஊசி உடைந்து வெளியே விழுந்ததா, உடலின் உள்ளேயே தங்கி விட்டதா என தெரியவில்லை என்பதால் இந்த விவகாரத்தை அப்படியே விட்டு விடுங்கள் என அலட்சியமாக கூறியதாக தெரிகிறது. அதன் பிறகுதான் அந்த விபரீதம் நடந்துள்ளது. ஊசி உடைந்து உடலில் தங்கிய நிலையில் குழந்தையை சர்வேஸ்வரன் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளான்.

 

இதையடுத்து தமிழா பரிசோதனைக்காக மீண்டும் அதை தனியார் மருத்துவமனைக்கு குழந்தை சர்வேஸ்வரனை கொண்டு சென்றுள்ளனர். அப்போதும் ஊசி உடைந்தது பற்றி செவிலியர்களும், மருத்துவர்களும் எதுவும் கூறவில்லை. இப்படி சுமார் 40 நாட்களாக உடைந்துபோன ஊசி குழந்தை சர்வேஸ்வரனின் உடலுக்கு உள்ளேயே இருக்க வலியால் அவதிப்பட்ட குழந்தை சர்வேஸ்வரன் அழுதபடியே இருந்துள்ளார்.

 

இந்த நிலையில் ஊசி போட்ட இடத்தில் அருகே கட்டி போல தென்படவே ஏதோ பூச்சி கடித்து இருக்கலாம் என கருதியதால் அந்த கட்டியை அமித்தி பார்த்தபோது சீலுடன் உறைந்துபோன ஊசியின் வெளிப்பட்டிருக்கிறது. அதிர்ச்சி அடைந்த ரமிலா உறவினர்களுடனும் குழந்தையுடனும் அதே தனியார் மருத்துவமனைக்கு வந்து இது குறித்து கேட்டுள்ளார்.

 

அப்போது தனியார் மருத்துவமனை நிர்வாகம் ஊசி உடைந்தது தங்களுக்கு தெரியும் என்றும், உடைந்து கீழே விழுந்து விட்டதாக நினைத்து பேசாமல் இருந்ததாகவும் கூறுகின்றனர். குழந்தை சர்வேஸ்வரனுக்கு மீண்டும் சிகிச்சை அளிப்பதாகவும், இந்த விஷயத்தை அப்படியே விட்டு விடுமாறும் கூறியதோடு பணம் தருவதாக பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது.

அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் மருத்துவமனை செவிலியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து ரமீலாவும், அவரது உறவினர்களும் திருச்செங்கோடு காவல் நிலையம் முன்பு திரண்டனர். அவர்கள் அளித்த புகாரின் படி வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

சாதாரண ஜலதோசத்திற்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் படாதபாடு பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon