உள்ளாட்சித் தேர்தலில் 18,570 பேர் போட்டியின்றி தேர்வு..! களத்தில் 2,31,890 பேர் பலப்பரீட்சை..!!
தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 18,570 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு வரும் 27, 30 தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. ஊராட்சித் தலைவர், ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் என மொத்தம் 91ஆயிரத்து 975 பதவிகளுக்கு 3.02 லட்சம் பேர் வேட்பு மனு செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனையில், 3643 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 48 ஆயிரத்து 891 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். மனுக்கள் வாபஸ் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் 27 மாவட்டங்களிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, மொத்தம் 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.மேலும், 18,570 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலோர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.





