காலையில் இட்லி கடை! மாலையில் வழிப்பறி
காலையில் டிபன் கடை வியாபாரம், மாலையில் வழிப்பறி என்று வலம் வந்த இந்த பெண்மணி காவல்துறையிடம் சிக்கியுள்ளார். சிசிடிவி காட்சிகளை கொண்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண்மணியை வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் மடக்கிய சம்பவம் சினிமா காட்சிகளை போல் அரங்கேறியுள்ளது.
சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்த பேச்சியம்மாள் என்பவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது கடைக்குள் புகுந்த பெண்மணி ஒருவர் பேச்சியம்மாளை தாக்கி அவரிடம் இருந்த 7 சவரன் நகையை பறிக்க முயன்று உள்ளார்.
நகையை பேச்சியம்மாள் கெட்டியாக பிடித்துக்கொள்ள அருந்த 3 சவரன் நகையுடன் அந்த பெண்மணி தப்பியோடியுள்ளார். அதிர்ச்சி அடைந்த பேச்சியம்மாள் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகாரளிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு நகை பறித்த நபரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 11 அரை கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள 64 சிசிடிவி கேமராக்களை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் ஒரு பெண்ணும், ஆணும் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் செல்வது பதிவாகி இருந்தது. அந்த இரு சக்கர வாகனத்தில் நம்பரை வைத்து விசாரணை நடத்தியதில் அது போலியானது என்பதும் தெரியவந்துள்ளது.
இதனால் காவல்துறையினர் இருவரின் உருவங்களை வைத்தே கண்டு பிடித்ததோடு பெண்மணியின் வீட்டிற்கு சென்று மடக்கி கைது செய்தனர். தொடர்ந்து அந்த பெண்மணியிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தான் அதிர்ச்சியடைய வைக்கும் தகவல்கள் தெரியவந்தன. சென்னை அயனாவரத்தில் சேர்ந்த ரேவதிக்கு திருமணமாகி கணவரும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்ட ரேவதி கார் மற்றும் இரு சக்கர வாகனம் வாங்கியுள்ளார். மெயின் ரோடு பகுதியில் டிபன் கடையும் நடத்தி வந்துள்ளார். ஆனால் போதிய வருமானம் இல்லாததால் மாதத் தவணையில் வாங்கிய வாகனங்களுக்கு பணம் செலுத்த முடியாமல் அவதிப்பட்டுள்ளார். அப்போதுதான் தனது மைத்துனர் ராஜேஷுடன் சேர்ந்து ரேவதி அந்த திட்டத்தை தீட்டியுள்ளார்.
காலையில் டிபன் கடை வியாபாரம் முடிந்த பிறகு இரு சக்கர வாகனத்தில் சென்று அப்பகுதியில் உள்ள கடைகளில் ரேவதி நோட்டமிட்டு உள்ளார். எந்த கடையில் பெண்கள் வியாபாரத்தை கவனிக்கிறார்கள், அவர்கள் எவ்வளவு நகைகள் அணிந்து உள்ளனர் என்பதை நோட்டமிட்டு உள்ளார்.
மாலையில் வாடிக்கையாளர்கள் குறைவாக இருக்கும் நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று பொருட்கள் வாங்குவது போல் நடித்து கடையில் உள்ள பெண்களின் நகைகளை பறித்து கொண்டு தப்பி உள்ளார். ரேவதியிடமிருந்து 13 சவரன் நகைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அவரது மைத்துனர் செய்யும் தேடிவருகிறார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




