--- --:--:-- --

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்

17

தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என நடிகர் மகேஷ்பாபு தெரிவித்துள்ளார்.

 

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

 

கடந்த மாதம் 27 ஆம் தேதி நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தில் லாரி ஓட்டுநர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

காவல்துறையினரின் விசாரணையில் அவர்கள் அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெண் மருத்துவரின் படுகொலைக்கு எதிராக நீதி கோரியும் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தெலுங்கானாவில் போராட்டம் வலுத்து வருகிறது.

 

இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் நடிகர் மகேஷ்பாபு நாளுக்கு நாள், மாதத்திற்கு மாதம், வருடத்திற்கு வருடம் எதுவும் மாறவில்லை. ஒரு சமூகமாக நாம் தோல்வி அடைகிறோம் என தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.

பெண்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு உரிய சட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்து இருக்கும் நடிகர் மகேஷ்பாபு இதுபோன்ற கொடூர குற்றங்களுக்கு மரண தண்டனையே தீர்வாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

 

இந்த விவகாரம் இணையதளங்களையும் ஆக்கிரமித்திருக்கும் நிலையில் டுவிட்டர் ஃபேஸ்புக் உள்ளிட்ட இணைய பக்கங்களில் ஜஸ்டிஸ் பார் பிரியங்கா ரெட்டி ஹேஸ் டேக்குகளை உருவாக்கி சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon