திருப்பரங்குன்றம்; உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசு சீராய்வு மனு!
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்ற இந்த ஆண்டு மட்டும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உடனடியாக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என பல்வேறு கட்சிகள் கோரிக்கை வைத்தன. இந்நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளது.இந்த முடிவை சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய இரண்டு கட்சிகளும் வரவேற்றுள்ளன.
இது குறித்து, சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம், “திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தவறான தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதை வரவேற்கிறோம்.மத வெறியர்களின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியாமல், உண்மையான பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வழக்கமான இடத்தில் தீபம் ஏற்ற உறுதியான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். அதற்கு அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் துணை நிற்க வேண்டும்” என தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதேபோல், சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், “திருப்பரங்குன்றம் பிரச்சனையில் உச்சநீதிமன்றத்தின் தவறான இடைக்கால உத்தரவை மறுசீராய்வு செய்ய தமிழ்நாடு அரசு மனுதாக்கல் செய்துள்ளது வரவேற்பிற்குரியது.திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சர்வே தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதித்த உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் இச்செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
சிறந்த வழக்கறிஞர்களை கொண்டு வாதாடி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்கா அருகில் உள்ள பிரிட்டிஷ் ஆட்சி காலத்து சர்வே தூணில், தீபம் ஏற்ற வேண்டும் என பிரச்சினையை அரசியல் நோக்கோடு கிளப்பி, மதரீதியில் மக்களை பிளவுபடுத்த முயலும் வகுப்புவாத சக்திகளின் சூழ்ச்சிகளை முறியடித்திட வேண்டும். மதநல்லிணக்கத்தையும், மதச்சார்பின்மையையும், மக்கள் ஒற்றுமையையும் பாதுகாத்திட அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ,தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





