--- --:--:-- --

உறவினர்களை வழியனுப்ப வந்து வந்தே பாரத் ரயிலுக்குள் சிக்கியவர்கள்!

8

பனாரஸ் – புது டெல்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 15) செல்லுபடியாகும் டிக்கெட் இன்றி பயணித்த ஒரு குழந்தை உட்பட 13 பேருக்கு மொத்தம் ரூ.36,140 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தங்கள் குடும்ப உறுப்பினர்களை வழியனுப்புவதற்காகவும், அவர்களின் உடைமைகளை ரயிலுக்குள் வைப்பதற்காகவும் அவர்கள் ரயிலில் ஏறியுள்ளனர். ஆனால், ரயில் புறப்படுவதற்கு முன்பாக அதன் தானியங்கி கதவுகள் மூடிக்கொண்டதால், அவர்களால் கீழே இறங்க முடியாமல் ரயிலுக்குள்ளேயே சிக்கிக்கொண்டனர்.

 

 

இது குறித்து ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இணையதளத்திடம் பேசிய வடக்கு மத்திய ரயில்வேயின் (என்.சி.ஆர்) தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி (சி.பி.ஆர்.ஓ) டாக்டர் சிவம் சர்மா, “நவம்பர் 15-ம் தேதி, 22415 என்ற எண் கொண்ட பனாரஸ் – புது டெல்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிலர் தங்கள் குடும்பத்தினரை வழியனுப்பவும், உடைமைகளை உள்ளே வைக்கவும் ஏறியுள்ளனர். பயணிகளின் பாதுகாப்பு காரணங்களுக்காக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் கதவுகள் தானாகவே மூடிக்கொள்ளும் என்பதால், இவர்கள் கீழே இறங்குவதற்கு முன்பே கதவுகள் மூடி ரயில் புறப்பட்டுவிட்டது. இதனால் அவர்கள் ரயிலுக்குள்ளேயே சிக்கிக்கொண்டனர்” என்று தெரிவித்தார்.

 

 

துண்ட்லா கட்டுப்பாட்டு அறையிலிருந்து இது குறித்துத் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்), அரசு ரயில்வே காவல்துறை (ஜி.ஆர்.பி) அதிகாரிகள் மற்றும் நிலைய கண்காணிப்பாளர் ஆகியோர் முன்னிலையில் தலைமை டிக்கெட் பரிசோதகர் (சி.டி.ஐ) இது குறித்து விசாரணை நடத்தினார்.

 

 

இந்தச் சோதனையின்போது, 12 பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை என மொத்தம் 13 பேர் செல்லுபடியாகும் டிக்கெட் இன்றி பயணித்தது கண்டறியப்பட்டது. ரயில்வே விதிகளின்படி அவர்கள் ‘அங்கீகரிக்கப்படாத பயணிகளாக’ கருதப்பட்டனர். “ரயில்வே விதிகளின் கீழ் அவர்கள் அங்கீகரிக்கப்படாத பயணிகளாகக் கருதப்பட்டு, அவர்களிடம் இருந்து உரிய பயணக் கட்டணம் மற்றும் அபராதம் வசூலிக்கப்பட்டது. மொத்தமாக ரூ.36,140 வசூலிக்கப்பட்டுள்ளது” என்று டாக்டர் சிவம் சர்மா கூறினார்.

 

 

செல்லுபடியாகும் பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே ரயில்களில் ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்திய ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது. ரயில் நிலைய வளாகத்திற்குள் வருபவர்கள் முறையான பிளாட்பாரம் டிக்கெட்டுடன் மட்டுமே வர வேண்டும் என்றும், குடும்பத்தினரை வழியனுப்ப ரயிலுக்குள் ஏறுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்றும் ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

“வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் போன்ற நவீன ரயில்களில் பாதுகாப்பு காரணங்களுக்காகத் தானியங்கி கதவு மூடும் வசதி உள்ளது. ரயில் புறப்பட்ட பிறகும் உள்ளே தங்கியிருக்கும் எவரும் ரயில்வே விதிகளின்படி கடுமையான அபராதத்தை எதிர்கொள்ள நேரிடும்” என்று அந்த ரயில்வே அதிகாரி எச்சரித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon