--- --:--:-- --

48,800 ஐஸ்கிரீம் குச்சிகள் – 15.2 மீட்டர் நீள தொங்கு பாலம்

12

கோவை ராக்ஸ் பள்ளியைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவர்கள், 48 ஆயிரத்து 800 ஐஸ்கிரீம் குச்சிகளைப் பயன்படுத்தி 15.2 மீட்டர் நீளமுள்ள தொங்கு பாலத்தை உருவாக்கி இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்துள்ளனர். முழுவதும் ஐஸ்கிரீம் குச்சிகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாலம், ஒரு மீட்டர் அகலமும், அதிகபட்சமாக 3.3 மீட்டர் உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

 

இந்த பிரம்மாண்டமான பாலத்தை உருவாக்க மாணவர்கள் 13 வாரங்கள் தொடர்ந்து உழைத்துள்ளனர். மொத்தம் 91 நாட்களில் 182 மணி நேரத்திற்கும் மேலாக திட்டமிட்டு, வடிவமைத்து, பல்வேறு கட்டமைப்பு நுணுக்கங்களுடன் இந்த பாலத்தை உருவாக்கியுள்ளனர். இந்த சாதனை முயற்சியில் ஐராவ், அழகு சம்ரித், அஷ்வின், ரித்திமா, யாஷ்மித், ஸ்வேதா அசோக், சான்வி சதுர்வேதி, எஸ். ட்விஷா, ஜெய் ஸ்ரிஹரி, கிரிஷிவ், கிருஷ்ணா பிரேம்சந்தர், ஜிஷ்ணு நவீன் மற்றும் முகேஷ் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 9-ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

 

 

 

இவர்களுக்கு மணிகண்டன் மற்றும் சோபன் எஸ். ஆகியோர் வழிகாட்டிகளாக இருந்துள்ளனர். பாடப்புத்தகங்களில் படிக்கும் பொறியியல் மற்றும் அறிவியல் கருத்துகளை செயல்முறையில் செய்து பார்க்கும் வகையில் இந்த முயற்சியை மாணவர்கள் மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், இந்தப் பாலத்தை உருவாக்குவது மிகவும் சவாலான அனுபவமாக இருந்தது. ஒவ்வொரு கட்டத்திலும் திட்டமிடல், பொறுமை மற்றும் குழு ஒருங்கிணைப்பு அவசியமாக இருந்தது என்றனர். தங்களது 13 வார கால கூட்டு முயற்சிக்கு இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் அங்கீகாரம் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிப்பதாக கூறினர்.

 

 

பள்ளியின் நிறுவனர் ஸ்வேதா கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், மாணவர்களின் படைப்பாற்றல், ஆராய்ச்சி ஆர்வம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதே கல்வியின் நோக்கம். மாணவர்கள் தங்களது அறிவையும் திறமையையும் ஒருங்கிணைத்து இத்தகைய சாதனையை நிகழ்த்தியிருப்பது பெருமையளிப்பதாக தெரிவித்தார். வகுப்பறை கல்வியைத் தாண்டி, தங்களது கற்பனைக்கும் கூட்டு முயற்சிக்கும் செயல்வடிவம் கொடுத்து, ஐஸ்கிரீம் குச்சிகளால் பிரம்மாண்ட தொங்கு பாலத்தை உருவாக்கிய கோவை பள்ளி மாணவர்களின் இந்த சாதனை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon