சண்டியர் டைட்டில் வைக்க அனுமதிக்கக் கூடாது!
இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘சண்டியர்’ என டைட்டில் வைக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது. கடந்த 2004-ல் இதே தலைப்பில் கமல்ஹாசன் தனது இயக்கத்தில் ஒரு படத்தை இயக்கினார். அப்போது அந்த டைட்டில் ஒரு குறிப்பிட்ட சாதியை உயர்த்தி பிடிப்பதாக இருப்பதாகவும், சாதி மோதலை உருவாக்கும் என்றும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்போது ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவும் இந்த டைட்டிலை வைக்கக் கூடாது என்று தெரிவித்த நிலையில் அதற்கு ‘விருமாண்டி’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது இந்த டைட்டிலை கமல்ஹாசன் மீண்டும் கொண்டு வந்த நிலையில் 20 வருடங்களுக்கு முன்பு இந்த டைட்டிலை வைக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்த டாக்டர் கிருஷ்ணசாமி தற்போதும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
அதுமட்டும் இல்லாமல், இந்த டைட்டில் வைக்க அனுமதிக்கக் கூடாது என்று அமைச்சர் ராஜ்மோகனிடம் மனு அளித்துள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணசாமி, கமல்ஹாசன் படத்திற்கு ’சண்டியர்’ என்ற பெயர் வைக்க அனுமதிக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசிடம் மனு அளித்திருக்கிறோம். கமல்ஹாசன் 2003-ஆம் ஆண்டு ‘சண்டியர்’ என்ற பெயரில் படம் தயாரிக்க முற்பட்ட போது ‘சண்டியர்’ என்ற பெயர் ஒரு சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட பெயர்.
அது பல்வேறு விதமான தவறான அர்த்தங்களை கொடுக்க கூடியது. தமிழகத்தில் இரு வேறு சமூதாயங்களிடையே பிணக்கை உருவாக்க கூடியது. அதன் மூலம் தமிழகத்தில் ஏற்கனவே இருக்கும் சாதிய மோதல்கள் அதிகமாகும் வாய்ப்புகள் இருக்கும் என்று எதிர்ப்பு தெரிவித்ததன் அடிப்படையில் அன்று முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, கமல்ஹாசனை தலைமை செயலகத்திற்கு அழைத்து சாதிய மோதல்களை ஏற்படுத்த கூடிய ‘சண்டியர்’ என்ற டைட்டிலை கைவிட வலியுறுத்தினார். இதையடுத்து கமல்ஹாசன் தன் படத்திற்கு ‘விருமாண்டி’ என்று பெயரை மாற்றினார். ஏறக்குறைய 23 வருடங்களுக்கு பிறகு அதே ‘சண்டியர்’ என்ற பெயரை சூட்டி புதிய படத்தை எடுக்கிறார்” என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





