செஞ்சி சிறுமி வழக்கு – பெற்றோரிடம் சிபிசிஐடி டிஐஜி விசாரணை
செஞ்சி சிறுமி காணாமல் போன வழக்கில் சிறுமியின் பெற்றோரிடம் சிபிசிஐடி டிஐஜி விக்ரமன் விசாரணை நடத்தி வருகிறார்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 12-ஆம் தேதி அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி காணாமல் போனார். சிறுமி மாயமாகி இன்றோடு 31 நாட்களாகியுள்ள நிலையில், சிபிசிஐடி போலீசார் 21-வது நாளாக பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
31 நாட்களாகியும் சிறுமி மாயமான வழக்கில் இதுவரை எவ்வித துப்பும், தகவலும் கிடைக்காததால் சிபிசிஐடி போலீசாரின் விசாரணை கோணம் மீண்டும் சிறுமியின் குடும்பத்தினர் மீது திரும்பி உள்ளது. நேற்று சிறுமியின் தாய் பவானியிடம் சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான போலீசார் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். அதேபோல் சிறுமி வீட்டருகே வசிப்பவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது சிறுமியின் தாய் பவானி, தந்தை வடிவேல் ஆகியோரிடம் சிபிசிஐடி டிஐஜி விக்கிரமன், எஸ்பி ஜவகர், டிஎஸ்பிக்கள் வேல்முருகன், கீதா ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். டிஐஜி விக்கிரமன் சிறுமி வீட்டின் பின்புறம் உள்ள முள் புதர் பகுதிகளில் ஆய்வும் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





