போலி புத்தக ஊழலில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது – அமைச்சர் ராஜ்மோகன்
போலி புத்தக ஊழலில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலகத்தை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கன்னிமாரா நூலகத்தில் மட்டும் அகல் விளக்கு பதிப்பகத்தின் 523 புத்தகங்கள் இருக்கின்றன என்றார். நிவேதா பால்ராஜ், நிவேதா மோகன் என்ற பெயரில் பல்வேறு புத்தகங்கள் 2025 ஆம் ஆண்டு வாங்கி உள்ளனர் எனவும் கூறினார்.
புத்தக ஊழலில் ஈடுபட்ட ஒருவரும் தப்பிக்க முடியாது என்றும் அமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார்.
தவெக ஆட்சியில் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்க இதுவரை எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை என்றும் அமைச்சர் ராஜ்மோகன் கூறினார். திருச்சி நூலகத்திற்கான புத்தகக் கொள்முதல் அனைத்தும் ரத்து செய்யப்பட உள்ளதாகவும், புதிதாக திறக்கப்பட உள்ள நூலகங்களுக்கான புத்தக டெண்டரும் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
அகல் விளக்கு பதிப்பகத்தின் புத்தகக் கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தொடங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை என்பது தொடக்கம் தான், தேவைப்பட்டால் இதற்கும் குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டார். அரசியல் பலம், அரசியல் பின்புலம், அறிவு பலம் கொண்டவர்களின் கூட்டுச் சதி இது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், நூலகத்தில் ஏற்பட்டுள்ள AI ஊழல் சர்வதேச தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது என்று கூறிய அமைச்சர் ராஜ்மோகன், வேகமாக நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக வெளிப்படுத்தினார். எங்களை பார்த்து அவர்கள் தற்குறிகள் என்று சொல்பவர்கள், சித்தாந்தம் பேசி மக்களை எப்படி ஏமாற்றி உள்ளனர் என்பதற்கு இந்த போலி புத்தக ஊழலே சாட்சி என்றும் எதிர்க்கட்சிகளை அமைச்சர் விமர்சித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





