கோவை செல்வ சிந்தாமணி குளத்தில் வெள்ளப்பெருக்கு!
கோவை செல்வபுரம் அருகே உள்ள செல்வ சிந்தாமணி குளத்தில் இருந்து வெளியேறிய மழைநீர் கழிவுநீருடன் கலந்து குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விஷ ஜந்துக்கள் மற்றும் கரப்பான் பூச்சிகள் வீடுகளை மொய்த்து வருவதால் குழந்தைகள் அச்சமடைந்துள்ள நிலையில், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனச் சுற்றியுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை செல்வ சிந்தாமணி குளத்தில் இருந்து குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீருடன் கழிவுநீர் கலந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். காம்பவுண்ட் சுவர்களில் கரப்பான் பூச்சிகளும் மொய்த்து வருவதால் குழந்தைகள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாநகர் செல்வபுரம் சுண்டக்காமுத்தூர் சாலையில் செல்வ சிந்தாமணி குளத்தில் இருந்து அதிக அளவு நீர் வெளியேறி, அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.குளத்தில் இருந்து வெளியேறிய மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால், குடியிருப்புவாசிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் தண்ணீர் தேங்கியதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், செல்வ சிந்தாமணி குளத்தின் அடிப்பகுதியில் இருந்து தண்ணீர் வெளியேறி குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.மழை நீரில் பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்களும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் அடித்து வரப்படுவதால் குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் அச்சமடைந்துள்ளனர். மேலும், வீடுகளின் சுற்றுச்சுவர் மற்றும் காம்பவுண்ட் சுவர்களில் கரப்பான் பூச்சிகள் அதிக அளவில் காணப்படுவதால், இதனால் சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, செல்வ சிந்தாமணி குளத்தில் இருந்து மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகுவதைத் தடுக்கவும், கழிவுநீர் கலப்பதைத் தவிர்க்கவும் மாநகராட்சி நிர்வாகம் உரிய ஆய்வு மேற்கொண்டு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாநகராட்சி நிர்வாகம் தரப்பிலும் அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி பணியாளர்களும் தேங்கி இருக்கும் நீரை வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




